தமிழ்நாடு

tamil nadu

இரட்டை இலை தோற்கும்.. விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்? - அதிமுக அரசியல் நிலவரம் என்ன?

By

Published : Feb 21, 2023, 8:02 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் தோற்கும் என அதிரடியாக பேசிய ஓபிஎஸ்சால், அதிமுகவின் நிலை என்னவாக இருக்கும் என இந்த கட்டுரையில் காணலாம்.

இரட்டை இலை தோற்கும்.. விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்? - அதிமுக அரசியல் நிலவரம் என்ன?
இரட்டை இலை தோற்கும்.. விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்? - அதிமுக அரசியல் நிலவரம் என்ன?

சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கான யுத்தத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதிக் கொண்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் போட்டியிட இரண்டு தரப்பும் முனைப்பு காட்டியது. இறுதியாக உச்ச நீதிமன்றம் சென்று ஈபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தைப் பெற்றனர். இதனால் இரட்டை இலைக்கு எதிராக நாம் போட்டியிட முடியாது என வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வோம் என்று ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர். ஆனால், ஓபிஎஸ் அணியினர் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அதேநேரம் ஈபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது என்பது ஓபிஎஸ்க்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

அன்றில் இருந்து ஈபிஎஸ் தரப்பினர் இடைத்தேர்தலில் முழுவீச்சாக பணிகளை மேற்கொள்ள, ஓபிஎஸ் அணியினர் மவுனம் காத்தனர். அதற்கு பின்னர் பிரச்சாரத்திற்கு நேரடியாக செல்ல முடியாவிட்டாலும் அறிக்கையின் வாயிலாகவும், சமூகவலைதளங்கள் மூலமாகவும் பிரச்சாரம் மேற்கொள்ள ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை ஓபிஎஸ் அணியினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று (பிப்.20) ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் சட்ட விதிகளை பாதுகாக்க 2ஆம் தர்மயுத்தம் தொடங்கி உள்ளோம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு தொண்டனை கட்சித் தலைமையில் அமர வைக்கும் வாய்ப்பை உருவாக்குவோம் என்றும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக மீண்டும் நியமனம் செய்வோம் என்றும் தெரிவித்தார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் தோல்வியை சந்திக்கும் என அதிரடியாக பேசினார்.

இதன் மூலம் ஈபிஎஸ் அணியை எதிர்ப்பதற்கு ஓபிஎஸ் தயாராகிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ்சின் இந்த அதிரடி பேச்சுக்கு என்ன காரணம் என்பதை இரண்டாம் கட்ட தலைவர்களிடம் விசாரிக்கும்போது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், எவ்வளவுதான் சட்டப் போராட்டம் மேற்கொண்டாலும் மக்களிடம் சென்றால் மட்டுமே கட்சியைக் கைப்பற்ற முடியும் என முதலில் கூறுகின்றனர்.

ஏனென்றால் ஓபிஎஸ் அணியின் பலத்தை நிரூபிக்க தென்மாவட்டங்களில் மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அதை வைத்து பிற மாவட்டங்களிலும் செல்வாக்கை அதிகப்படுத்தி கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

அது மட்டுமில்லாமல் அனைத்து இடங்களிலும் பொதுக்கூட்டங்களை கூட்ட வேண்டும் எனவும், முக்கியமாக அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் நேசித்த திருச்சியில் முதல் மாநாடு நடத்த வேண்டும் எனவும் கூறினர். மேலும் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுவாக்குவதற்கு கிராம ஊராட்சிக்கு இரண்டு துடிப்பான இளைஞர்களை கண்டறிந்து கட்சி பணியில் மேற்கொள்ள வைக்கவும், அதேபோல் அடிமட்டம் வரை நிர்வாகிகளை நியமனம் செய்யவும், எம்ஜிஆர் - ஜெயலலிதா போன்ற தலைவர்களின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், காலங்களுக்கு ஏற்ப தகவல் தொழிநுட்பத்தில் மிகவும் வேகமாக செயல்பட வேண்டும் என்ற பல கோரிக்கைகளை ஓபிஎஸ் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால்தான் ஓபிஎஸ் தற்போது இது போன்று அதிரடியாக பேசியுள்ளார் எனவும் அவர்கள் விளக்கினர். மேலும், இரட்டை சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா என்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறிய அவர்கள், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மக்களை சந்திப்பதற்கு தயாராக இருங்கள் என ஓபிஎஸ் தங்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறினர்.

மேலும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இயக்கத்தை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடமிருந்து மீட்டெடுப்பது, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமனம், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முப்பெரும் விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளது ஆகிய 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினரின் இந்த புதிய முயற்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின்போது, ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்து சில நிர்வாகிகள் இருப்பதால், அவருக்கு வேறு வழி இல்லாமல் இரண்டாம் தர்மயுத்தம் தொடங்கியுள்ளதாக கூறினார்.

கட்சியின் அடிப்படை வரை நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மேற்கொண்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன் மூலம் ஈபிஎஸ் உடனான மோதலில் தான் உறுதியாக இருக்கிறேன் என ஓபிஎஸ் அவரது நிர்வாகிகளுக்கு உணர்த்துவதாக நடந்து கொண்டுள்ளார் என தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வரும் வரையிலும் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருவார் எனவும் பாபு கூறினார்.

இதையும் படிங்க:''அதிமுகவின் சட்ட விதியை காப்பாற்ற இரண்டாம் தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம்'' - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details