தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் இல்லை - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!

By

Published : Apr 3, 2023, 7:20 PM IST

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Quarrys case
குவாரிகள் வழக்கு

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்த சிவலிங்கம் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மரக்காணம் தாலுகாவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பல்வேறு கனிமவளங்கள் உள்ளன. அதில் நல்முக்கல் மற்றும் கீழ் அரங்குணம் கிராமங்களில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கனிம வளங்களை மாவட்ட நிர்வாகம் 5 முதல் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. நல்முக்கல் கிராமத்தில் குவாரிகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், கடந்த 2019ல் குத்தகை காலம் முடிந்தும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான அபாயகரமான வெடிப்பொருட்களை பயன்படுத்தி, பாறைகளை உடைத்து சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் அரசிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குத்தகை காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக இயங்கி வரும் குவாரிகள் இயங்கத் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளின்படி குவாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என அனுமதிக்கப்பட்டுள்ளதோ, அதன்படி குவாரிகள் இயக்கத்தை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரதச்சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை. சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என வாதாடினார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசு தரப்பு விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: "கரம்பை மண் எடுப்பதற்கான விதிமுறைகளை தளர்த்துக" - விவசாயிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details