தமிழ்நாடு

tamil nadu

“அரபு மொழி வகுப்புகள் எடுப்பதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்க பிரச்சாரம்” - என்ஐஏ அறிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 9:41 PM IST

NIA Raids in TN: அரபு மொழி வகுப்புகள் எடுப்பதாகக் கூறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்க பிரச்சாரம் செய்திருப்பது, இன்று நடந்த என்ஐஏ சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், ஜமேஷா முபின் (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்தனர்.

இதில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், தொடர் சோதனையின்போது வெடி பொருள்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த மாதம் கோவையில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் கிடைத்த தகவல்களின் படி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புதிய வழக்கைப் பதிவு செய்தனர். இந்த புதிய வழக்கின் அடிப்படையில் சென்னை, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (செப்-16) காலையில் இருந்தே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சென்னையில் நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பிஸ்மில்லாத் தெருவில் புகாரி என்பவர் வீடு, அயனாவரம் மயிலப்பன் தெருவில் முகமது ஜக்கிரியா என்பவர் வீடு, திருவிக நகர் காமராஜர் தெருவில் முஜிபுர் ரகுமான் என்பவர் வீடு என மூவர் வீடுகளில் காலை முதலே தீவிர சோதனை நடைபெற்றது. இதற்காக சென்னை, கோவை, ஹைதராபாத்தில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 25 குழுக்களாகப் பிரிந்து 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு குழுவில் 4 முதல் 5 அதிகாரிகள் இருந்தனர்.

இது குறித்து என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தொடர்பாக தென் மாநிலங்களில் 31 இடங்களில் இன்று (செப்-16) சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரூ.60 லட்சம் பணமும், 18,200 அமெரிக்க டாலர், மொபைல் போன், சிம் கார்டுகள், லேப்டாப்கள், ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்ப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்நாட்டின் கோவையில் 22 இடத்திலும், சென்னையில் மூன்று இடத்திலும் தென்காசியில் ஒரு இடத்திலும் என 26 இடத்தில் சோதனை செய்யபட்டது. தெலங்கானாவில் 5 வெவ்வேறு இடங்களிலும் சோதனையானது நடைபெற்றது. மேலும், அரபு மொழி வகுப்புகள் எடுப்பதாகக் கூறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்க பிரச்சாரம் செய்தனர்” என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. என்ன நடக்கிறது?

ABOUT THE AUTHOR

...view details