தமிழ்நாடு

tamil nadu

"பேப்பரில் சர்க்கரை என எழுதி அதை பார்த்து டீ குடித்தால் இனிக்குமா?.. அதுபோன்றது தான் மகளிர் இடஒதுக்கீடு" - ஆனி ராஜா ஆவேசம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 10:15 PM IST

Updated : Oct 14, 2023, 10:58 PM IST

பேப்பரில் சர்க்கரை என்று எழுதி, அதை பார்த்தபடியே டீ குடித்தால் இனிக்குமா? அது போன்றது தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்ற இந்திய பெண்கள் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா கூறினார்.

ஆனி ராஜா
ஆனி ராஜா

ஆனி ராஜா

சென்னை:திமுக மகளிர் அணி சார்பில் "மகளிர் உரிமை மாநாடு" சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 5 ஆண்டுகளுக்குப் பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வந்தனர்.

மேலும் இந்த மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஹாசினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், இந்திய பெண்கள் தேசிய சம்மேளனம் (NFIW) பொதுச் செயலாளருமான ஆனி ராஜா பேசியதாவது, "இந்த மகளிர் உரிமை மாநாடு நடப்பதற்கு எல்லா விதமான வேலைகளையும் செய்து, நல்லபடியாக இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்று இந்த மேடையில் எங்களுடன் அமர்ந்து இருக்கும் முதலமைச்சருக்கு நன்றி.

கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காகவும், அவருடைய வாழ்க்கையே கொண்டாடுவதற்காக இந்த கூட்டத்தில் அமர்ந்து இருக்கும் அனைத்து பெண்களுக்கும் அன்பு முத்தங்கள். இப்போது இந்தியா முழுவதும் மதவாதம் விஷபாம்பு போல பரவி இருக்கிறது. மதச்சார்பற்ற இந்திய பாராளுமன்றத்தில், ஜெய் ஸ்ரீ ராம் மந்திரம் தான் கேட்கிறது.

குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடியினர் என்பதாலும், அவர் ஒரு பெண் என்பதாலும், அவரை பாராளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து செங்கோலை பாராளுமன்றத்தின் உள்ளே வைத்த அரசு தான் மோடி அரசு. இதில் இருந்து மத்திய அரசு என்ன நிலையில் பெண்களை நடத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பாலியல் வன்கொடுமை செய்திகள் எல்லாம் 2 நாட்களுக்கு மட்டுமே ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளது. அதற்கு பிறகு மறைந்து போகிறது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் நிலைமைதான் தற்போது இந்தியாவில் உள்ளது.

2014ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சி வந்ததில் இருந்து, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கான புள்ளி விவரங்களே அதற்கு சான்று, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்திற்கு சென்றால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை.

மேலும் தங்களின் உரிமைக்காக போராடிய பெண்களின் ரத்தத்தின் மீது தான் நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டன. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு பெண்களை ஏமாற்றி தான் ஆட்சியில் உள்ளது. பெண்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து இருக்கும் பாஜக ஆட்சியை நாம் ஒழித்து கட்ட வேண்டும்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றி இருக்கிறார்கள். ஒரு பேப்பரில் சர்க்கரை என்று எழுதி வைத்துக்கொண்டு, அதை பார்தபடி டீ குடித்தால் அது இனிக்குமா? அதேபோல் தான் மத்தி அரசு கொண்டு வந்துள்ள இந்த மகளிர் இடஒதுக்கீடும். பெண்களுக்காக உள்ள அனைத்து உரிமைகளையும் காப்பாற்றவும், இந்தியாவை காப்பாற்றவும் நம்மை நாமே காப்பாற்றவும், மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும்" என்று ஆனி ராஜா தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடும்பமா? கூகுளா? மைக்ரோசாஃப்ட் துணைத்தலைவரின் சாதனைப் பயணம்..!

Last Updated : Oct 14, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details