தமிழ்நாடு

tamil nadu

'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - துரைமுருகன்

By

Published : Oct 29, 2021, 2:17 PM IST

தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணை, பாதுகாப்பாக உள்ளது என்றும், நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்
துரைமுருகன்

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்.29) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரையில் நீரை தேக்கிவைக்க ஆணை வழங்கியுள்ளது. மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி, முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழ்நாடு கண்காணித்து வருகிறது.

கேரளாவைச் சார்ந்த தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று (அக்.28) தமிழ்நாட்டின் வாதங்களை கேட்ட பின், நவம்பர் 11 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் வரை, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றுமாறு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு, நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் படியே நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக, வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகைபாதை வழியாக கடத்துகிறது.

வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை எடுத்த முடிவின்படி, வைகை அணைக்கு குகைபாதை வழியாக அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீரோடு, கேரள அலுவலர்களுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு அளித்தபின் இன்று(அக்.29) காலை 7.30 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையின் இரு வழிந்தோடி மதகுகளை திறந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது. இது, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே செய்யப்படுகிறது.

உண்மைக்கு புறம்பான செய்தி - புறக்கணிக்கப்பட வேண்டும்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையினை கவனமாக இயக்கி வருகிறது.

இதற்கு புறம்பாக வரும் எந்தத் தகவலும் உண்மையானவை அல்ல என்பதால் அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை ஆகும். தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை

ABOUT THE AUTHOR

...view details