தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 7:36 PM IST

Diwali 2023 cases registered in Chennai: தீபாவளி தினத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக இதுவரை சென்னையில் 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு
விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகை தினமான இன்று (நவ.12), சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு முன்னரே, தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தி இருந்தது.

மேலும், தீபாவளி பண்டிகையான இன்று உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகளைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோக் கூடாது எனவும் காவல் துறை அறிவுறுத்தி இருந்தது.

மேலும், பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிவதன் மூலம் வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து பெரும் ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளதால், அத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும் பல கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது.

மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் இரண்டு காவலர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டும் வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தது, 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடித்தது, அனுமதி இல்லாத இடங்களில் பட்டாசுகள் வெடித்தது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக, இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை போலீசார், தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகளில் இத்தனை பேர் பயணித்தார்களா? - முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details