தமிழ்நாடு

tamil nadu

பரந்தூர் விமான நிலைய விவகாரம்; அமைச்சர் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை - முழுவிவரம்

By

Published : Dec 20, 2022, 10:04 PM IST

பரந்தூர் விமான நிலையம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான அமைச்சர் குழுவினர் கிராம விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரந்தூர் விமான நிலைய விவகாரம்; அமைச்சர் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை
பரந்தூர் விமான நிலைய விவகாரம்; அமைச்சர் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இன்று (20.12.2022) சென்னை, தலைமைச் செயலகத்தில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபணை குறித்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகிய அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் 7 வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 வருவாய் கிராமங்கள் என மொத்தம் 13 வருவாய் கிராமங்களில் சென்னை புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த 15.10.2022அன்று தலைமைச் செயலகத்தில், ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, க.சரவணன், ப.இரவிச்சந்திரன், து.கதிரேசன். செ.கருணாகரன், ச.கணபதி, க.சுப்பிரமணியன், வெ.முனுசாமி, லோ.இளங்கோ ஆகிய விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது, ’ஏகனாபுரம் கிராமமே ஒரு சமத்துவபுரமாக உள்ளது. எங்கள் கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான வழியினை தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர், ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்காகத்தான் வாழ்வாதாரத்திற்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவும், சந்தை மதிப்பிற்கு 3.5 மடங்கு இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்ததோடு, கிராம மக்களின் கோரிக்கையை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள், 17.10.2022அன்று அவர்களுடைய கோரிக்கையினை வலியுறுத்தி, மேற்கொள்ள இருந்த நடைபயணத்தை கைவிட்டனர். இருப்பினும் அவர்களுடைய கோரிக்கையை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் குழு முடிவு செய்ததின் அடிப்படையில், இன்று (20.12.2022) தலைமைச் செயலகத்தில் மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், ஏகனாபுரம் கிராமத்தைச்சேர்ந்த க.சரவணன், லோ.இளங்கோ, ப.ரவிச்சந்திரன், து.கதிரேசன், க.சுப்பிரமணி ச.கணபதி, ந.பலராமன், வெ.முனுசாமி, செ.கருணாகரன், கொ.ஜெயக்குமார் ஆகிய விவசாயிகள் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டார்கள்.

ஏகனாபுரம் கிராமத்தில் நில எடுப்பு செய்யாமல் தவிர்க்கும்படியும், விவசாய நிலம் பாதிக்காத வகையிலும், நீர்நிலைகள் பாதிக்காத வகையிலும், விமான நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் கேட்டுக்கொண்டார்கள்.

விமான நிலையம் அமையவுள்ள இடம் மற்றும் அதன் புவியியல் மாற்றம் நீரியல் அமைப்பு குறித்து சம்பந்தப்பட்ட வல்லுநர்குழு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்கள் ஏகனாபுரம் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்கள். ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதனை ஏற்றுக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:வரும் ஜனவரி 4-ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details