தமிழ்நாடு

tamil nadu

தஞ்சாவூர், திருச்சியில் ஐடி முனையம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு

By

Published : Jan 11, 2023, 12:23 PM IST

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் ஐடி முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. அப்போது அச்சடிக்கப்பட்ட உரையில் இருந்த சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரின் இத்தகைய செயலுக்கு பேரவையிலேயே கண்டனம் தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அத்துடன் அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால், பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று (ஜன 10), சட்டமன்ற உறுப்பினர் ஈவேரா திருமகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று (ஜன 11), சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் கேள்விநேரம் தொடங்கியது.

இதில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன், “காலையில் இஞ்சி, நன்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டு காலை ஊண்றி கோலை வீசி குலுங்கி நடப்பார் என்று கூறுவார்கள். கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காய் நடப்பார்கள் என்றார்கள். கழுவாயன் மலையிலும், சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கழுவாயன் மலையிலும் கடுக்காய் அதிகமாக கிடைக்கிறது.

சிறு தரகர்களால் அந்த மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது. ஆகவே சாயம் தயாரிப்பதற்கும், மருத்துவ குணம் கொண்ட கடுக்காய் தொழிற்சாலை சங்கராபுரம் தொகுதியில் உருவாக்கி தர அமைச்சர் முன் வருவாரா” என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காமல் இருக்கும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து திமுக சட்டப்பேரவை அமைச்சர் டிஆர்பி. ராஜா, “தஞ்சை டெல்டா மாவட்டங்களில், ஐடி முனையம் மற்றும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு, “தஞ்சை வேளான் சார்ந்த நிலம். அங்கு உணவு சார்ந்த நிறுவனங்கள் அமைக்க அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். சென்னை போன்ற நகரங்கள் மட்டுமே ஐடி முனையம் இருப்பதால், இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் தஞ்சை, திருச்சி ஆகிய இரண்டாம் கட்ட நகரங்களில் ஐடி முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.

இதையும் படிங்க: ’எங்க தொகுதியில் அப்படி எதுவும் நடக்கவில்லையே’ - சபாநாயகர் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details