தமிழ்நாடு

tamil nadu

Bypass surgery: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை

By

Published : Jun 14, 2023, 12:15 PM IST

Updated : Jun 14, 2023, 12:51 PM IST

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, கரூரில் உள்ள அவரது பூர்வீக வீடு உள்ளிட்ட அவரது தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று (ஜூன் 13) காலை முதல் சோதனை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, இன்று (ஜூன் 14) அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய ரத்த நாள பரிசோதனை இன்று காலை 10.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கை

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அந்த நேரத்தில் அவரது இருதய துடிப்பு உடலின் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், 2 முதல் 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

மேலும், அவருக்கு சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில், தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும் எனவும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மீது பாஜக அல்லாத பிற கட்சி மூத்த தலைவர்கள், மற்ற மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “இது மாதிரி பாஜக இந்தியாவில் பல மாநிலங்களில் நடத்தி வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள்.

அதுதான் இங்கும் நடக்கிறது. விசாரணை என்ற பெயரில் நேரத்தைக் கடத்தி, செந்தில் பாலாஜியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லைக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள்” என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:Minister Senthil Balaji Arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது! நள்ளிரவு முதல் நடந்தது என்ன?

Last Updated :Jun 14, 2023, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details