தமிழ்நாடு

tamil nadu

எனது தற்கொலைக்கு அமைச்சர் சேகர்பாபு தான் காரணம்.. மகள் பரபரப்பு பேட்டி!

By

Published : May 10, 2023, 10:00 AM IST

Updated : May 10, 2023, 5:32 PM IST

அமைச்சர் சேகர்பாபு தூண்டுதலின் பேரில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் துறையினர் தொடர்ச்சியாக பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக அமைச்சர் சேகர்பாபுவின் மகள் கூறி உள்ளார்.

எனது தற்கொலைக்கு அமைச்சர் சேகர்பாபுதான் காரணம்.. மகள் பரபரப்பு பேட்டி
எனது தற்கொலைக்கு அமைச்சர் சேகர்பாபுதான் காரணம்.. மகள் பரபரப்பு பேட்டி

அமைச்சர் சேகர்பாபு தூண்டுதலால் தன் கணவர் மீது போலீஸ் பொய் வழக்கு போடுவதாக மகள் புகார் தெரிவித்துள்ளார்

சென்னை:ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க்கைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (29). அமைச்சர் சேகர்பாபுவின் மருமகனான சதீஷ் மீது கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

அதேபோல கடந்த 2016ஆம் ஆண்டு சதீஷ், அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சதீஷ் மீது நம்பிக்கை மோசடி, பாலியல் வன்புணர்வு உள்பட 7 பிரிவுகளின் கீழ் புளியந்தோப்பு அனைத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடந்த 2018ஆம் ஆண்டு சதீஷை கைது செய்தனர்.

பின்னர், 2018ஆம் ஆண்டு நவம்பரில் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சதீஷிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அல்லிக்குளம் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பூந்தமல்லி அருகே தலைமறைவாக இருந்து வந்த சதீஷை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சதீஷ், அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சதீஷ் குமாரின் மனைவியும், அமைச்சர் சேகர்பாபுவின் மகளுமான ஜெயகல்யாணி, “கடந்த 2016ஆம் ஆண்டு முதல் எனது கணவர் சதீஷ் குமாரை காதலித்து வந்தேன்.

எங்களது காதல் விஷயம் தெரிந்த பின்பு, வீட்டை விட்டுச் சென்றேன். அப்போது எனது கணவர் மீது சிறு சிறு வழக்குகள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு எனது தந்தையான அமைச்சர் சேகர்பாபு தூண்டுதலின் பேரில், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அதிகப்படியான பொய் வழக்கு எனது கணவர் மீது போடப்பட்டது.

நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட பிறகு, தொடர்ச்சியாக அமைச்சர் சேகர்பாபுவின் தூண்டுதலின் பேரில் எங்களைக் காவல் துறையினர் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இது மட்டுமின்றி 2018ஆம் ஆண்டு எனது கணவர் மீது ஒரு பெண் கொடுத்த மோசடி வழக்கை பாலியல் வன்புணர்வு வழக்காக மாற்றி பொய்யாகப் போட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு மனுவை நீதிமன்றத்தில் போட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். எனது தந்தை சேகர்பாபுவின் தொல்லையால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஓடி ஒளிந்தோம். குறிப்பாக, ஓட்டேரி காவல் ஆய்வாளர் ஜானி செல்லப்பா தொடர்ச்சியாக எங்களது வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்து, வீட்டை அடித்து உடைத்தார்.

அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. சமீபத்தில் எனது கணவர் மீது பெண் கொடுத்த வழக்கு தொடர்பாக பிடிவாரன்டு பிறப்பித்தனர். எனவே, அந்த வழக்கில் நேற்று எனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்தப் பெண்ணை காவல் துறையினர் வற்புறுத்தி எனது கணவர் மீது பொய்யான வழக்கை கொடுக்க வைத்துள்ளனர்.

அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அந்தப் பெண்ணே எனது கணவரை தொடர்பு கொண்டு தன்னை மிரட்டுவதாகவும், தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொய்யாக பேச வைத்து, வீடியோவை பதிவு செய்துள்ளனர். எனது தந்தை சேகர்பாபு தூண்டுதலின் பெயரில், காவல் துறை செய்யும் அடாவடித்தனம் தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொடுக்க இருக்கிறேன். முதலமைச்சர் தலையிட்டு பதில் சொல்ல வேண்டும். எனது கணவரை சிறையில் கொடுமைப்படுத்தி என்னை பார்க்க விடாமல் செய்தால், நிச்சயமாக தற்கொலை செய்து கொள்வேன். அதற்கு காரணம் அமைச்சர் சேகர்பாபு மற்றும் காவல் துறை என எழுதி வைப்பேன்.

அமைச்சரின் மகளான எனக்கே காவல் துறையினர் இவ்வளவு தொந்தரவு செய்கிறார்கள். அப்படி என்றால், சாமானியப் பெண்களின் நிலை என்ன?” என தெரிவித்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சதீஷ் குமாருக்கு வருகிற 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி அல்லிக்குளம் மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரை காவல் துறையினர் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - அமைச்சர் நாசர் நீக்கம்!

Last Updated : May 10, 2023, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details