தமிழ்நாடு

tamil nadu

5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:55 PM IST

Updated : Sep 25, 2023, 8:36 PM IST

Minister Sekarbabu on Women Priests in Temples: 15 கோயில்களில் முழு நேர அன்னதான பிரசாத திட்டம் நடைபெற்று வருவதாகவும், தமிழகம் முழுவதும் 48 கோயில்களில் இந்தத் திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு
பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில், பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை கோயிலில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாரணி என்பவருக்கு வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயத்திலும், சாருமதி என்பவருக்கு சித்திபுத்தி விநாயகர் ஆலயத்திலும், சிவரஞ்சனி என்பவருக்கு மயிலாப்பூர் முண்டககன்னி அம்மன் ஆலயத்திலும், கோமதி என்பவருக்கு சைதாப்பேட்டை சிவசுப்பிரமணியம் ஆலயத்திலும், பார்கவி என்பவருக்கு அண்ணாநகர், பாடி திருவல்லீஸ்வரர் ஆலயத்திலும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சகர் பணி நியமன ஆணை: இதனை அடுத்து 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 ஓதுவார்களுக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பணி நியமன ஆணையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கோயில்களில் பணி காலங்களில் மரணம் அடைந்த நபர்களின் வாரிசுகளான மூவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

கருணை அடிப்படையில் பணி:இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கோயில்கள் பராமரிப்பு, திருத்தேர் வழங்குதல் உட்பட பல பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இயங்கி வரக்கூடிய கோயில்களில் காலியாக உள்ள பணியாளர்களை நிரப்புவது, பணிக்காலத்தின் பொழுது மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அரசு சிறப்பாக செய்து வருகிறது.

107 ஓதுவார்கள் பணி நியமனம்:அந்த வகையில் இன்று, 5 பெண்கள் உட்பட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற திராவிட மாடலின் ஆட்சியில் தான் இவை நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 107 ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் கோயில்கள் காலியாக உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் கூடிய விரைவில் நிரப்பப்படும்.

உதவி அர்ச்சகராக பணி:இரண்டரை வருட திமுக ஆட்சியில் இதுவரை 9 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 180 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் ஏற்கெனவே 107 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள பணியிடங்களும் கூடிய விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைணவ கோயில்களில் பெண் ஓதுவார்கள் பாடல்கள் பாடுவதில்லை.

பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்த அர்ச்சகர்களுக்கு கூடுதல் பயிற்சி வேண்டும் என்ற காரணத்தினால் கோயிலில் உதவி அர்ச்சகராக பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தலைமை அர்ச்சகரிடம் பயிற்சி பெற்று இன்னும் சிறந்த அர்ச்சர்களாக பணியாற்றும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேருவதற்கு 71 பேர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

160க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பள்ளியில் பயின்றவர்களுக்கு உதவி அர்ச்சர்களுக்கான பயிற்சி காலமாக இது மாற்றியமைத்து தரப்படும். தற்பொழுது புதிதாக 11 பெண்கள் அர்ச்சகர் பள்ளியில் சேர்ந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி தற்பொழுது 111 பேர் அர்ச்சகர்கள் பயிற்சி மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளார்கள்.

தமிழகத்தில் 714 கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் என தரவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழக அரசால் இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. இதில் உபயதாரர் நிதியாக 60 கோடிக்கு மேல் பெறப்பட்டதால் 87 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முழு நேர அன்னதான பிரசாத திட்டம்: 5 ஆண்டுகளில் ஆயிரம் வருடங்கள் பழமையான 714 கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு முழுமையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். கோயில்களின் பராமரிப்பிற்காக ரூபாய் 700 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி காலத்தில் உண்டியல் வசூல் என்பது ஒவ்வொரு முறையும் கூடிக் கொண்டே தான் செல்கிறது. முழு நேர அன்னதான பிரசாத திட்டம் 15 கோயில்களில் நடைபெற்று வருகிறது.

அவதூறு பரப்பினால் நடவடிக்கை:இதனை தொடர்ந்து மேலும் 5 கோயில்களுக்கு அன்னதான பிரசாதம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 48 கோயில்களில் இந்தத் திட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். விமர்சனத்தை பார்த்து எப்பொழுதும் கோபப்படாத ஆட்சி இந்த ஆட்சி. நல்ல விஷயம் என்று தெரிந்தும் அரசியல் ஆதாயத்திற்காக அவதூறு பரப்ப கூடியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தான், கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! அதிமுக- பாஜக குறித்து முக்கிய முடிவு வெளியாகும் எனத் தகவல்!

Last Updated : Sep 25, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details