தமிழ்நாடு

tamil nadu

ராமேஸ்வரம் - காசிக்கு 300 நபர்கள் ஆன்மிக சுற்றுலா.. அரசு சார்பில் ஏற்பாடு என அமைச்சர் தகவல்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 5:25 PM IST

Minister Sekarbabu: ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் 300 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம்  காசி ஆன்மிகப் பயணம்
ராமேஸ்வரம் காசி ஆன்மிகப் பயணம்

சென்னை:ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தின் மூலம் ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு 300 பேரை ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தது. "2022 - 2023ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தின் மூலம் காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு இந்த ஆண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்" என்று அறிவிக்கப்பட்டது

அதேபோல் இந்த ஆண்டும், பக்தர்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு 300 நபர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும். மேலும், இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களை விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம்.

ஆன்மிகப் பயணத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன், அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்" என்று தெரிவித்தார்.

மேலும் ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது "www.hrce.tn.gov.in" என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆந்திர ரயில்கள் மோதல் சம்பவம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details