தமிழ்நாடு

tamil nadu

3ஆம் அலை குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள் - மா. சுப்பிரமணியன் வேண்டுகோள்

By

Published : Jul 18, 2021, 4:49 PM IST

மூன்றாம் அலை குறித்து சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்பும் செய்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ma subramanian
மா சுப்பிரமணியன்

சென்னை:சின்னமலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஜூலை.18) தொடங்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜூலை மாதம் இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தற்போது நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிவார்கள், பழங்குடியினருக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், நாகூர் போன்ற திருத்தலங்களிலும் முழுமையாகத் தடுப்பூசி அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்பது யூகமே

இந்நிகழ்வின் ஒரு கட்டமாக, சின்னமலை தேவாலயப் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. மூன்றாம் அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்பது ஒரு யூகத்தின் பேரில் தான் கூறப்படுகிறது.

ஆனாலும் மாவட்ட மருத்துவமனைகளில் சுமார் பத்தாயிரம் படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியோடு தயார் நிலையில் உள்ளன. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை தயார் நிலையில் இருக்கிறது'' என்றார்.

நியுமோகாக்கல் தடுப்பூசி

கரோனா தடுப்பூசி இன்னும் குழந்தைகளுக்கு செலுத்தப்படாத நிலையில், (pneumococcal) நியுமோகாக்கல் தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படுகிறதா என்ற கேள்விக்கு, "கடந்த வாரம் பூந்தமல்லியில் ஐந்து வயது குழந்தைகளுக்கு நியுமோகாக்கல் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாமை தொடங்கி வைத்து இருக்கிறேன்.

தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்பு

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பூசித் திட்டம்

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இதற்கான முக்கியத்துவம் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தாமல் குழந்தைகள் இறந்துள்ளனர்.

மூளைக் காய்ச்சல் மற்றும் நிமோனியா காய்ச்சலுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மூன்று தவணையில் செலுத்தப்படும் இந்தத் தடுப்பூசிக்கு தனியார் மருத்துவமனையில் 12,000 ரூபாய் கட்டணம். ஆனால், தற்போது அரசு இலவசமாக வழங்குகிறது.

நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் விலக்கு என்பது உறுதியான கருத்து

நீட் தேர்வு விலக்கு என்பதுதான் உறுதியான நிலைப்பாடு. ஆனால், தீர்வு என்று வரும் பட்சத்தில் அனைத்து விதமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தான் வருகிறது.

மாநில மொழிகளிலும் தேர்வு என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி என்றாலும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது தான் உறுதியான கருத்து.

மூன்றாம் அலை புரளியை நம்பாதீர்கள்

மூன்றாம் அலை குறித்து சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்பும் செய்திகளை நம்ப வேண்டாம், மக்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதை ஊடகம் மூலம் தெரிவித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வன்னியர் தனி இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்துப் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details