தமிழ்நாடு

tamil nadu

மருந்து தட்டுப்பாடு குறித்து விவாதிக்க தயாரா? - எடப்பாடிக்கு சவால் விட்ட மா.சுப்பிரமணியன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 9:22 PM IST

Updated : Nov 14, 2023, 9:54 PM IST

Minister M.Subramanian: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காகப் பொறுப்பில்லாமல் அறிக்கை விடுகிறார் எனவும், மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள், நானும் உடன் வருகிறேன், நேரடியாகச் சென்று ஆய்வு செய்வோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister Ma Subramanian responded to the statement issued by EPS regarding medicines shortage hospitals
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை:ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் திமுக அரசு மக்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, திமுக அரசைக் கடுமையாகச் சாடி இருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதற்கு நான் அவரிடம் தட்டுப்பாடு எங்கு நிலவுகிறது என்று தெரிவித்தால், அதனை நிவர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்திருந்தேன். மேலும், தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் மூலம் (Tamilnadu Medical Service Corporation) தமிழ்நாட்டில் மருந்துகள் இருப்பு நிலவரம் குறித்தும் தெரிவித்திருந்தேன். ஆனால் இதனைக் கருத்தில் கொள்ளாமல் இன்றும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசின் சிறந்த செயல்பாடுகளின் காரணமாகத் தமிழ்நாடு மருத்துவத் துறை பல்வேறு விருதுகளைக் கடந்த ஓராண்டாக வாங்கி வருகிறது. 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 549 விருதுகள் கிடைத்துள்ளது. ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 310 விருதுகள் கிடைத்துள்ளது.

அதே போல் மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டச் சான்றிதழ் (LaQshya – Labour Room Quality Improvement Initiative) 2017ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளில் 79 சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 45 சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமி தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், அவர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் எத்தனை முறை சுற்றி வந்திருக்கிறீர், எத்தனை மலைக்கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்கிறீர், எத்தனை ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு நீங்களோ அல்லது உங்கள் அமைச்சரோ சென்றிருக்கிறீர்கள். நாங்கள் எத்தனை முறை இதைச் செய்திருக்கின்றோம் என்று தெரிந்து கொண்டு, இதுகுறித்து எங்களிடம் நேரிடையாக விவாதிக்கத் தயாரா?

ஆகையால் எடப்பாடி பழனிசாமி ஆகிய நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்த ஒருவரோ சட்டமன்றம் நடக்கும்போது இதுகுறித்து பேசலாம். சட்டமன்றம் நடக்காதபோது எங்கேயோ ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டு பேசுவது எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல.
எடப்பாடி பழனிசாமி மருந்து மாத்திரைகள் 30 நாட்களைக் கடந்தும் இல்லை என்று அறிக்கை விட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வருடத்திற்கும் 313 அத்தியாவசிய மருந்துகள் வாங்கப்படுகிறது, 234 வகையான மருத்துவ அறுவை மற்றும் தையல் உபகரண சாதனங்கள், 326 சிறப்பு மருந்துகள் மற்றும் 7 ரத்தம் உறைதல் சம்பந்தப்பட்ட மருந்துகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு ஏழை மக்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பொதுச் சுகாதார இயக்குநரகத்தின் சார்பில் பூச்சிக் கொல்லி சம்பந்தமான மருந்துகள் வாங்கித்தரப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. மருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் அதன் தரத்தை நிர்ணயம் செய்து எவ்வளவு தேவை என்று வாங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள மருந்து கிடங்குகள் மூலம் ரூ.326.92 கோடி மதிப்பீட்டில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் புதியதாக 6 மாவட்டங்களிலும் மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கொள்முதல் செய்யப்பட்டுள்ள மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டு, தற்போது கையிருப்பில் ரூ.240.99 கோடி மதிப்பில் மருந்துகள் உள்ளது.

இதற்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள், நானும் உடன் வருகிறேன், நேரடியாகச் சென்று ஆய்வு செய்வோம். மேலும், எடப்பாடி பழனிசாமி மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மருத்துவர்கள் பணியிடங்கள் 1021, மருந்தாளுநர் பணியிடங்கள் 986, சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் 1,066, கிராம சுகாதார செவிலியர்கள் 2,222 மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற பல்வேறு வழக்குகள் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

விரைவில் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சரால் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கலாம். அதுதொடர்பாக விவாதம் செய்யத் தயாராகவே உள்ளோம்” என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தருமபுரி, கிருஷ்ணகிரி மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு.. 2ஆம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

Last Updated :Nov 14, 2023, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details