தமிழ்நாடு

tamil nadu

சென்னை, திருவள்ளூரில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 2:19 PM IST

Chennai Storm precaution activities: புயலை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Minister Kkssr Ramachandran press meet
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் பேட்டி

சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கி முதலமைச்சர் கடந்த 2 மாத காலமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். புயலை எதிர்நோக்கி நேற்று முதலமைச்சர் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பேசி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அரசு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மண்டல அலுவலர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை களத்திற்கு செல்ல வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எந்த பகுதியில் புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் என எண்ணப்படுகிறதோ, அந்த பகுதியில் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளை அங்கேயே தங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

புயலால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகளவில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மொத்தம் 435 பேர் தயார் நிலையில் உள்ளதோடு, மின்சார கம்மங்கள் மின்சார வயர்கள் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், மரங்கள் உடைந்து விழும் வாய்ப்பு இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மழையால் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 420 குடிசைகள் பாதிப்படைந்துள்ளது. அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 162 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரமாக உள்ள மாவட்டங்களில் 121 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 4 ஆயிரம் பள்ளிகள், திருமண மண்டபங்களை தயாராக வைத்துள்ளோம். சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்கும் அளவிற்கு நிவாரண மையங்கள் தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த 2 நாட்களுக்கு இந்த 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details