தமிழ்நாடு

tamil nadu

தொழிற்சாலைகள் சட்டம் 1948-ல் திருத்தம்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

By

Published : Apr 21, 2023, 3:52 PM IST

தொழிற்சாலைகள் சட்டம் 1948-ல் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று (ஏப்.20) நடந்த தொழிலாளர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்து அறிமுகம் செய்தார்.

அந்த சட்ட மசோதாவில், 'கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் தொகுப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடாததால் அது நடைமுறைக்கு வரவில்லை. இந்த சட்டம், தொழிற்சாலைகள் சட்டம்-1948-யையும் உள்ளடக்கிய தொகுப்பு சட்டமாகும்.

தமிழ்நாடு மிகப் பெரிய உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்ட கேந்திரமாக விளங்குகிறது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளையும், தொழிற்சாலை பணியாளர்களையும் கொண்ட மாநிலம் தமிழ்நாடாகும். இந்த நிலையில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை சங்கங்களிடம் இருந்து மாநில அரசுக்கு கோரிக்கை மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க:MK Stalin: அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாடு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

அதில், வேலை நேர சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். எளிதில் பின்பற்றக் கூடிய, குறிப்பாக பெண்களுக்கான வேலை நேரங்கள் தொடர்பான சட்டப்பூர்வமான வழிவகைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய தொகுப்புச் சட்டத்தின் 127-வது பிரிவின்படி, தொழிற்சாலைகளில் ஓய்வு இடைவெளி, கூடுதல் பணிநேரம், நீட்டிக்கப்படும் நேரம் தொடர்பான அம்சங்கள் குறித்து மாநில அரசே அறிவிப்பாணையை வெளியிட்டு முடிவெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மத்திய தொகுப்புச் சட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வராத நிலையில், தொழிற்சாலைகளில் எளிதில் பின்பற்றக் கூடிய நேரத்தை நிர்ணயிக்கும் வகையில், தொழிற்சாலைகள் சட்டம் 1948-ஐ திருத்தம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட இந்த அறிவிப்பாணையால் தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் பணி நேரம், பணியாளர்களின் ஓய்வு வயது உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசே தீர்மானிக்க வாய்ப்புள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Siruvani River: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி.. சிறுவாணி இடையே கேரள அரசின் அணை குறித்து பேரவையில் அமைச்சர் பதில்!

ABOUT THE AUTHOR

...view details