தமிழ்நாடு

tamil nadu

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய பதில் என்ன?

By

Published : Jun 12, 2023, 2:01 PM IST

Updated : Jun 12, 2023, 10:07 PM IST

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

plus one public exam
பிளஸ் 1 பொதுத்தேர்வு

அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை பூங்கொடுத்து கொடுத்து வரவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் நூலகம், சத்துணவு சத்துணவு கூட, கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் ,நோட்டு புத்தகம், சீருடை, வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஷூ சாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ்நாடு முழுவதும் 8,340 நடுநிலை பள்ளிகள், 3,547 உயர்நிலை பள்ளிகள் 4,221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இன்று கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 46,22,324 மாணவர்கள் வந்துள்ளனர். பள்ளிக்கு வந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

பள்ளிகளில் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டு அதிக தேர்ச்சி விகிதத்தை காட்ட வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

நானும் காலையில் பள்ளியில் சுற்றிப் பார்த்தேன். குடிநீர் கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி வகுப்பறைகளில் முறையாக பள்ளி மாணவர்களின் நலனுக்கு தேவையானதை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். முதலாம் வகுப்புக்கு 1,31,000 மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர்.

முதல் முறையாக பள்ளி தொடங்கிய நாளே கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முதல் 14 மாதங்கள் கழித்து வழங்கப்பட்டு வந்த கல்வி உபகரணங்கள் தற்போது முதல் நாளிலேயே வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கப்பட்டு வர வர ஜூலை மாத இறுதிக்குள் முழு சீருடையும் வழங்கப்படும்.

இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி சீருடை பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு பதிலாக டேப் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிதி நிலைமை சரியானதும், மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும். இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மற்றும் நிதி துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மாநில கொள்கை குழுவில் புதிதாக 2 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. அறிக்கை சமர்ப்பித்தப் பின் அடுத்த ஆண்டு நடைமுறைபடுத்த முடியுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 15ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உடற்கல்வித்துறைக்கு பாடம் வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் நபர்களுக்கு போட்டி தேர்வு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளோம். அதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம். மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நீக்குவதா?... இல்லையா?... என்பது குறித்து புதிய கல்வி கொள்கை சமர்பித்தப் பின்னர் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது 11 ஆம் வகுப்பு தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், திருச்சி அருகே தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த மாணவ மாணவிகளுக்கு பக்கத்தில் உள்ள பள்ளியில் பாடம் எடுக்க ஏற்பாடு செய்துள்ளோம் இதனால் அவர்களுக்கு கல்வி தடை படாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி: கோப்பையை தட்டிச் சென்றார் கர்நாடக வீரர்!

Last Updated : Jun 12, 2023, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details