தமிழ்நாடு

tamil nadu

'என்எல்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது' - நீதிமன்றம் திட்டவட்டம்!

By

Published : Aug 3, 2023, 7:22 PM IST

என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனவும்; தொழிலாளர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்எல்சி நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் என்எல்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சங்கம் தரப்பில் கடந்த எட்டு நாள்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்எல்சி தரப்பில், குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்லாமல் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினால் ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் வேலை செய்ய முடியவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு அனுமதிக்கப்படாத இடத்தில் அதுவும் என்எல்சி கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். மேலும், போராட்டம் நடத்துவதற்கான இடங்களை நிர்ணயிக்கும்படி கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று கடலூர் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

என்எல்சி நிர்வாகத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்னையைத் தீர்வு காணும் வகையில் உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிப்பது தொடர்பாக அன்றைய தினம் விவாதிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மணிப்பூரில் மீண்டும் கலவரம்... 20 பேர் படுகாயம்.. இம்பாலில் மீண்டும் ஊரடங்கு அமல்!

ABOUT THE AUTHOR

...view details