தமிழ்நாடு

tamil nadu

12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - அமலாக்கத் துறையிடம் நீதிபதி கேள்வி

By

Published : Sep 3, 2021, 5:05 PM IST

10,600 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான நோட்டீசை எதிர்த்து ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறை மூன்று வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc
நீதிபதி

ஃபிளிப்கார்ட் நிறுவனம் 2009ஆம் ஆண்டுமுதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

மேலும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உள்பட ஒன்பது பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்நியச் செலாவணி மோசடி

அவர்களுக்கு 1.35 பில்லியன் டாலர் (10,600 கோடி ரூபாய்) அபராதம் விதித்ததோடு, அதை ஏன் சந்திக்கக் கூடாது என்று அதற்கான உரிய விளக்கத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த நோட்டீசை எதிர்த்து, ஃபிளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சென்னை அமலாக்கப்பிரிவு இந்த நோட்டீசை அனுப்பியதால், இவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இருந்தார்.

12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

அந்த மனுவில், "ஃபிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து தான் 2010ஆம் ஆண்டு விலகிவிட்டேன். தனக்கும் தற்போது நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை. ஏற்கனவே பலமுறை இது குறித்து அமலாக்கத் துறை முன்பு முன்னிலையாகி விளக்கம் அளித்தும் 12 ஆண்டுகள் கழித்து தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே நோட்டீஸுக்குத் தடைவிதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமலாக்கத் துறை கடந்த 12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். இது குறித்து மூன்று வாரத்துக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:விவாகரத்தான நபர்கள் குறி... போலி மேட்ரிமோனி தளம் மூலம் கைவரிசையைக் காட்டிய நைஜீரிய கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details