தமிழ்நாடு

tamil nadu

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து: டிச.21ஆம் தேதி தண்டனை அறிவிப்பதாக நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 2:57 PM IST

Updated : Dec 19, 2023, 3:34 PM IST

Minister Ponmudi case: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் டிச.21ம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என கூறி உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து

சென்னை:கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி இருவரையும் விடுவித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2016ம் ஆண்டு மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களையும், 39 சாட்சிகளை விசாரித்ததாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை,பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகக் கூறினார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு, சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும் கூறிய அவர் இவற்றைப் புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்கள் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என அவர் வாதிட்டார். இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,“பொன்முடி மனைவி பெயரில் தவறான சொத்து சேர்த்தது நிரூபணமாகிறது. வருமான வரி ஆவணங்கள் நிரூபிக்கவில்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அவ்வாறு விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். அதனால், விழுப்புரம் நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது.

கீழமை நீதிமன்றம் வங்கிக் கணக்கு ஆவணங்களை முழுமையாகப் பார்க்கத் தவறிவிட்டது. 64 சதவிகிதம் சொத்து சேர்த்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பொன்முடி வழக்கு விசாரணைக்கு உகந்தது தான். விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

டிசம்பர் 21ஆம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரடியாகவோ? காணொலி காட்சி மூலமாகவோ? நேரில் ஆஜராக வேண்டும். அப்போது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்” எனத் தீர்ப்பில் குறியுள்ளார்.

இதையும் படிங்க:திருச்செந்தூர் ரயிலில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு! மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி!

Last Updated :Dec 19, 2023, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details