தமிழ்நாடு

tamil nadu

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குளறுபடி விவகாரம்: தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 5:24 PM IST

TNPSC: அரசுப் பணிக்கான தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படவில்லை எனக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கில் தேர்வு தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தது.

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை வழங்கியதற்காக, தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், தேர்வில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும், அதேபோல் தவறு எப்படி நடந்தது, எப்படி சரி செய்வது என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் எனவும், மொத்த தேர்வு முறை குறித்து விசாரித்தால் அது தேர்வாணையத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு, அரசுப் பணி தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.

இந்த விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் எனக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணைக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க:அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details