தமிழ்நாடு

tamil nadu

ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம்; தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்.. பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 10:39 PM IST

RSS route march in Tamilnadu: நீலகிரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்காதது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

RSS route march in Tamilnadu
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உரிய நிபந்தனையுடன் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீலகிரியில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதிக்காதது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதிக்க வேண்டுமெனவும்; தவறினால் தமிழக உள்துறை செயலாளர் அமுதா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், எருமாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் ஆகிய 4 பேருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் (Independence Day), விஜய தசமி, அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அணிவகுப்பு நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கு தடை விதிக்க முடியாது என, 33 இடங்களில் உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு அக்டோபர் 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அக்டோபர் 22ஆம் தேதி அணிவகுப்புக்கான வழித்தடத்தை 20ஆம் தேதிக்குள்ளும், 29ஆம் தேதி பேரணிக்கான வழித்தடத்தை ஐந்து நாட்களுக்கு முன்னதாகவும் இறுதி செய்து விண்ணப்பிக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி, மனு கொடுப்பதற்காக மாவட்ட நிர்வாகி ஆர்.தியாகராஜன் என்பவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலை சந்திக்க அக்டோபர் 19ஆம் தேதி சென்றபோது சந்திக்க மறுத்ததுடன், நீதிமன்ற உத்தரவு நகலை கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.தியாகராஜன் தரப்பு வழக்கறிஞர் ரபு மனோகர் மற்றும் P.பழனிநாதன் ஆகியோர் தமிழக உள்துறை செயலாளர் அமுதா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், எருமாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அந்த நோட்டீசில், 'அக்டோபர் 16ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, அரசு தலைமை வழக்கறிஞரும், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இருந்த நிலையில், அந்த உத்தரவு குறித்து டிஜிபி கவனத்தில் கொள்ளாதது, அக்டோபர் 19ஆம் தேதியன்று தங்களிடம் உத்தரவு நகலைப் பெற்ற பிறகே தெரிந்துகொண்டது, அதன் பின்னரும், நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி அளிக்காததது ஆகியவை நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, 'நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தவறினால் நால்வருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்' எனவும் வழக்கறிஞர் நோட்டீஸில் எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"நீட் தேர்வெழுதும் மாணவர்களின் ஆடைகளை கிழிப்பதுதான் மத்திய அரசின் மாடல்?" - அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details