தமிழ்நாடு

tamil nadu

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி தவறாக செய்தி வெளியிட்ட வழக்கு - நாளிதழ் ஆசிரியருக்கு முன்ஜாமீன்!

By

Published : Jun 29, 2023, 3:44 PM IST

Updated : Jun 29, 2023, 4:09 PM IST

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறாக கட்டுரை வெளியிட்டது தொடர்பான வழக்கில், நாளிதழ் ஆசிரியருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC granted
புலம்பெயர் தொழிலாளர்கள்

சென்னை:தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சில வீடியோக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, திருப்பூரில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியாகின. இந்த வீடியோக்கள் தமிழ்நாட்டில் வாழும் வட மாநிலத் தொழிலாளர்கள் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், இதுபோன்ற வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து வதந்தி பரப்புவோரை கைதும் செய்தது. இந்த விவகாரத்தில் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் உள்நோக்கத்தோடு இதுபோன்ற வதந்திகளையும், வீடியோக்களையும் பரப்பியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த சில யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், வதந்திகளை செய்தியாக வெளியிட்ட இரண்டு நாளிதழ்களின் ஆசிரியர்கள் மீதும் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளரும், அந்த செய்தியினை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியருமான பிரசூன் மிஷ்ரா, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், சில தொழிலாளர்களின் விரல்கள் வெட்டப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்தன. மேலும், தமிழகத்தில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தி மொழி பேசியதற்காக தினமும் தாக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக நேரடி தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது. மாறாக, தமிழகத்தில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தில் செய்தி வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் இரு சமுதாயத்தினருக்கு இடையே பகையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதனால், பீகார் தொழிலாளர்கள் தொடர்பாக கட்டுரையை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன். என் மீது மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை இன்று(ஜூன் 29) விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஆவடி காவல்நிலையத்தில் ஒரு வாரமும், திருப்பூர் காவல்நிலையத்தில் ஒரு வாரமும் கையெழுத்திட வேண்டும் - புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தவறாக கட்டுரை வெளியிட்டதாக தங்களது நாளிதழில் செய்தி வெளியிட வேண்டும், அதை 4 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பிரசூன் மிஷ்ராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ: பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீண்டும் கைது!

Last Updated : Jun 29, 2023, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details