தமிழ்நாடு

tamil nadu

மவுலிவாக்கம் கட்டிட வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய மு.க.ஸ்டாலின்; முடித்து வைத்த உயர் நீதிமன்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 5:14 PM IST

Moulivakkam building Collapse: சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக பொருளாளராக இருந்த போது தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

MHC closed the case seeking a CBI probe into Moulivakkam building accident case
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: போரூர் அடுத்த மவுலிவாக்கம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டிடம், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசால் இடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி, இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அப்போது திமுக பொருளாளராக இருந்த, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, கட்டிட விபத்து சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் காரணமும் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மவுலிவாக்கம் கட்டிட விபத்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தேர்தலில் வேட்பாளர்களின் டெபாசிட் அதிகரிக்கக் கோரி மனு; தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!

ABOUT THE AUTHOR

...view details