தமிழ்நாடு

tamil nadu

இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது உபா சட்டமா? - உயர்நீதிமன்றம் கேள்வி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:45 PM IST

Unlawful Activities Act (UAPA): இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தை பிரயோகப்படுத்த முடியுமா? என்ற கேள்வி விவாதத்திற்குரியது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

madras hc asks whether to register case under UaPA Act against those planning to kill Hindu religious leaders
இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது உபா சட்டமா என ஐகோர்ட் கேள்வி

சென்னை:நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை உள்ளிட்டவைகளுக்கு தீங்கு ஏற்படுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தை Unlawful Activities (Prevention) Act (UAPA), இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது பிரயோகப்படுத்த முடியுமா? என்ற கேள்வி விவாதிக்கப்பட வேண்டியது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறி, ஈரோட்டை சேர்ந்த அசிஃப் முஸ்தகீன் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் குற்றவாளி என தீர்ப்பு வந்தாலும் கூட, வழக்கு விசாரணையின் போது காலவரம்பின்றி சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறி, அசிஃப் முஸ்தகீனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் போதோ அல்லது தீவிரவாத நோக்குடன் மக்களை தாக்கும்போதோ, உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், ஆனால் இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது அந்த சட்டத்தை பிரயோகப்படுத்த முடியுமா? என்ற கேள்வி விவாதத்திற்குரியது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆயுத பயிற்சி வழங்கியதாக பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த உமர் ஷெரிப், முகமது சிகம் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த இந்த அமர்வு, இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை எனவும், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details