தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்: காரணம் என்ன?

By

Published : Jul 27, 2023, 5:44 PM IST

ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் தமிழகத்துக்குள் நுழைந்தால் போராட்டம் வெடிக்கும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை :சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் நிறுவனத்தைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற 20 ஆண்டுகளுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்களைத் துப்பாக்கிச் சூடு நடத்தி அரசின் பயங்கரவாதத்தால் 13 பேர் பலியானார்கள் எனவும், ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் முறைகேடு செய்துள்ளார் எனவும் தெரிவித்த திருமுருகன் காந்தி, அவர் ஒரு சூழலியல் குற்றவாளி என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இங்கிலாந்தில் குடியேறி வாழ்ந்து வரும் அவர் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க இந்தியா வருவதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் குற்றவாளியான அவர் இங்கு வந்தால் போராட்டம் வெடிக்கும் எனத் திருமுருகன் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவரை தமிழகத்திற்கு அனுமதிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஃபாத்திமா பாபு, ஸ்டெர்லைட் நிறுவனத்தை எப்படியாவது திறக்க வேண்டும் எனப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஸ்டெர்லைட் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், 4 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகக் கூறியுள்ளார்கள் எனவும், அனில் அகர்வால் தமிழ்நாட்டுக்குள் துணிந்து வருவதாக இருந்தால் அவரது நோக்கம் என்னவாக இருக்கும் என யோசித்துப் பாருங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இங்குள்ள அரசியல்வாதிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்திக்கத் திட்டமிட்டிருந்தால் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன், ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்க முயற்சி நடப்பதற்குக் காரணம் மத்திய அரசின் ஆதரவு இருப்பதால்தான் எனக் குற்றம்சாட்டினார். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி பிரதமர் மோடி இதுவரை ஏதாவது பேசியிருப்பாரா? என கேள்வி எழுப்பிய வசீகரன், இந்தச் சூழலில் அனில் அகர்வால் தமிழகம் வருவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:பழனி கோயிலில் சேவல், கோழிகளை குறைந்த விலைக்கு ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details