தமிழ்நாடு

tamil nadu

காரில் சவாரி வந்த வடமாநில நபரிடம் கத்தி: காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

By

Published : Feb 17, 2021, 9:11 PM IST

சென்னை: காரில் சவாரியாக வந்த வட மாநில நபரிடம் கத்தி, நைலான் கயிறு ஆகியவை இருந்ததால், சந்தேகம் அடைந்த கார் ஓட்டுநர், வடமாநில நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

arrest
arrest

சென்னை செம்பியம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சரவணராஜ்(34). இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்ட்ரல் பகுதியில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு(பிப்.16) 7.30 மணியளவில் சென்ட்ரலில் சவாரிக்காகக் காத்திருந்தபோது, நபர் ஒருவர் எண்ணூர் வரை சென்றுவிட்டு மீண்டும் சென்ட்ரல் வர வேண்டும் என்று கூறி காரில் ஏறியுள்ளார்.

அவரிடம் 1,350 ரூபாய் பேரம் பேசிய சரவணராஜ் எண்ணூர் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது காரை இருட்டான பகுதியில் நிறுத்துமாறுக் கூறி அந்த நபர் இறங்கி சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் கழித்து காருக்கு வந்த அவர் மீண்டும் இறங்கி சென்றார். இதில் சந்தேகமடைந்த சரவணராஜ் அவரை பின் தொடர்ந்து பார்த்த போது, ஒரு வீட்டினை நோட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

மறுபடியும் அந்த நபர் காருக்கு வந்த போது சரவணராஜ் நேரமாவதாகக் கூறி பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் பணமெல்லாம் தரமுடியாது எனக் கூறி காரில் அமர்ந்தார். மேலும் அவரது கையில் பேனா வடிவிலான சிறிய கத்தி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரவணராஜ், அந்த நபரிடம் சாமர்த்தியமாக பேசி பெரியமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

சந்தேகத்திற்கிடமாக சவாரியாக வந்த நபரை அவர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் சிங்(35) என்பதும், இவர் கடந்த ஒரு மாதமாக திருவல்லிக்கேணி தாதா மார்க்கெட்டிலுள்ள விடுதியில் தங்கி வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவரிடம் இருந்த பேனா வடிவிலான கத்தி, நைலான் கயிறு, 3 சிம் கார்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான நபர் கொலை செய்வதற்காகச் சென்றாரா அல்லது வீடு புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சினிமா படப் பாணியில் கார் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details