தமிழ்நாடு

tamil nadu

மதுரை மேம்பால விபத்து - ஆய்வு செய்ய குழு அமைப்பு

By

Published : Sep 1, 2021, 7:33 PM IST

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மதுரை மேம்பால விபத்து
மதுரை மேம்பால விபத்து

சென்னை: ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.700 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த ஆக.28ஆம் தேதி கட்டுமானப் பணியின்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட விபத்துகளை சுட்டிக்காட்டி இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் பதில்

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பாக ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்படும் இந்த பாலத்திற்கான முழு நிதியையும் ஒன்றிய அரசுதான் வழங்குகிறது. பளுதூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பொறியாளர்களின் கவனக்குறைவே முழுக்காரணம். விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத்திடம் வலியுறுத்தி இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: மதுரை மேம்பால விபத்து - ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என அமைச்சர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details