தமிழ்நாடு

tamil nadu

காவலர்களின் பதவி உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 10:40 PM IST

Madras High court: 10 ஆண்டுகள் தலைமை காவலர்களாக பணியாற்றாத பெண் தலைமை காவலர்களுக்கு 2011ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர்களின் பதவி உயர்வு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு
காவலர்களின் பதவி உயர்வு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு

சென்னை: கடந்த 1991ஆம் ஆண்டு முதல்நிலை பெண் காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள், 10 ஆண்டுகள் பணியை முடிக்காமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக 2011ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால், 2011ஆம் ஆண்டு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட தங்களை விட, பணி மூப்பு பட்டியலில் பெண் சிறப்பு எஸ்.ஐ.கள் மூத்தவர்களாக உள்ளதால் தங்களது பதவி உயர்வு பாதிக்கப்படுவதாகக் கூறி, 2011ல் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஐ.கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், 10 ஆண்டுகள் தலைமைக் காவலர்களாக பணியை முடிக்காத இவர்களுக்குச் சிறப்பு எஸ்.ஐ பதவி உயர்வு வழங்கிய 2011ஆம் ஆண்டு அரசாணையை ரத்து செய்யக் கோரியிருந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், 12 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி காலதாமதமாக வழக்கு தொடர முடியாது எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், 1990 - 91ஆம் ஆண்டுகளுக்குப் பின், நேரடியாக முதல்நிலை பெண் காவலர்கள் பதவிக்குத் தேர்வு நடத்தப்படவில்லை என்பதால், ஒருமுறை நடவடிக்கையாக முதல் நிலை பெண் காவலர்களாக நேரடியாக தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வை அரசு வழங்கியுள்ளது.

தற்போது, இவர்களுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க டி.ஜி.பி, அரசுக்குக் கடந்த ஆண்டு பரிந்துரை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, "இந்த பதவி உயர்வு விவகாரத்தில் 1995ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு உள்துறையால் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த அரசாணைகளை எல்லாம் யாரும் எதிர்க்கவில்லை. அதனால், அந்த அரசாணைகளின்படி வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை எல்லாம் மீண்டும் பரிசீலிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பயண நேரத்தில் ஆப்சென்டான விமானி! அப்சட்டான பயணிகள்! என்ன நடந்தது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details