தமிழ்நாடு

tamil nadu

கோயில் செயல் அலுவலர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீடிக்கிறார்களா? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 3:42 PM IST

Madras High Court: தமிழகத்தில் 47 கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா என விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல் அலுவலர் நீடிப்பது ஏன்
கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல் அலுவலர் நீடிப்பது ஏன்

சென்னை:தமிழகத்தில் உள்ள கோயில்களை நிர்வகிக்க, எந்த நியமன உத்தரவும் இல்லாமல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஜன.19) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், எந்தவித நியமன உத்தரவு இல்லாமலும், கால வரம்பு இல்லாமலும் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 47 கோயில்களின் பட்டியலை அளித்து, அங்கு செயல் அலுவலர்கள் நியமனம் குறித்து அறநிலையத்துறை ஆணையரிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் பணியில் தொடர தடையில்லை என தெரிவிக்கப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அறங்காவலர்கள், தக்கார்கள் இருந்தாலும், செயல் அலுவலர்களை நியமிக்க முடியும், அவர்கள் ஐந்து ஆண்டுகள் பணியில் நீடிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து, மனுதாரர் குறிப்பிடும் 47 கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலர்கள் பணியில் உள்ளனரா என்பது குறித்து விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் பறக்கும் ரயில் பாலம் விபத்து; நிலநடுக்கம் போல் வீடுகள் அதிர்ந்ததாக மக்கள் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details