தமிழ்நாடு

tamil nadu

விஷாலின் 'மார்க் ஆண்டனி' எவ்வித சிக்கலும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 3:12 PM IST

Mark Antony movie: நடிகர் விஷாலின் நடிப்பில் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள "மார்க் ஆண்டனி" திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Mark Antony movie
விஷாலின் "மார்க் ஆண்டனி" திரைப்பட ரிலீசுக்கு அனுமதி

சென்னை: நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

இதுசம்பந்தமாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடனைத் திருப்பி செலுத்தாமல், உத்தரவாதத்தை மீறி, "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ரூ.15 கோடியை உயர் நீதிமன்ற பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பாக டிபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டுமென்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. அவ்வாறு செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், விஷாலின் "மார்க் ஆண்டனி" திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி 15 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதால், விஷாலின் புதிய படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது விஷால் தரப்பில், எந்த படத்தையும் விஷால் நிறுவனம் தயாரித்து வெளியிடவில்லை எனவும். மார்க் ஆண்டனி படம் சொந்த தயாரிப்பும் இல்லை. இந்த படத்தில் விஷால் ஒரு கதாப்பாத்திரமாக மட்டுமே நடித்துள்ளார். அதனால் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். மத்தியஸ்தரை நியமித்து வழக்கை முடித்து வைக்க வேண்டும். பைனான்சியர் அன்புச்செழியனிடம், திரைப்படத்தில் நடித்து கடனை அடைத்து விடுவதாக மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டது. லைகா நிறுவனம் அதை கடனாக மாற்றி திரைப்படத்தை வெளியிட தடை கோருவது ஒப்பந்தத்துக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பணத்தை கடனாக பெற்று விட்டு தொடர்ந்து படத்தில் நடித்துக் கொண்டே இருப்பீர்கள். அதற்கான சம்பளத்தையும் வாங்கி விடுவீர்கள். ஆனால் கடனை அடைக்க முடியாதா? என கேள்வி எழுப்பினார். மேலும், லைகா நிறுவனத்தின் கடனை திரும்ப அடைப்பதாக புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது, அன்புச்செழியனிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தையே கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறீர்கள். விஷால் தரப்பில் கடனை திரும்ப கொடுப்பதற்காக எந்த உத்திரவாதத்தையும் அளிப்பதில்லை.

வழக்கில் விஷாலின் அனைத்து அசையும், அசையா சொத்துக்களை இணைக்க வேண்டும். எப்படி கடனை திரும்ப அடைக்க போகிறீர்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஏற்கனவே, ரூ.6 கோடி கடன் லைகா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது என்பதால், மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வெற்றிமாறன் கதையில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சூரி!

ABOUT THE AUTHOR

...view details