தமிழ்நாடு

tamil nadu

8000 செவிலியர்களுக்கு தகுதி இருந்தும் நிரந்தரம் செய்யப்படாதது ஏன்? - கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

By

Published : Aug 7, 2023, 10:04 PM IST

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8000 செவிலியர்களுக்கு தகுதி இருந்தும் நிரந்தரம் செய்யப்படாதது ஏன்? என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ககன் தீப் சிங் பேடியை ஆஜராக உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்
8,000 செவிலியர்களுக்கு தகுதி இருந்தும் நிரந்தரம் செய்யப்படாதது ஏன்

சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வு மூலமாக கடந்த 2015 ஆம் ஆண்டு 8ஆயிரம் செவிலியர்களுக்கு தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்பட்டனர். 2 வருடங்கள் தொகுப்பூதிய பணி முடித்த பின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 8 வருடங்கள் ஆகியும் 4,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வரை கூடுதலாக 4,000 செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்தால் அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நிரந்தர செவிலியர்களின் பணியுடன் ஒவ்வொரு தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால் இது குறித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஒவ்வொரு தொகுப்பூதிய செவிலியர்களும் அவர்கள் செய்யும் பணி குறித்த பிரதிநிதித்துவம் பெற்று குழுவானது சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமென்று கடந்த 2022ம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க:புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை!

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பீ. டி. ஆஷா அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான குழு தொகுப்பூதிய செவிலியர்களிடமிருந்து பிரதிநிதித்துவம் பெற்று தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்தர செவிலியர்களுக்கு இணையான பணியை செய்யவில்லை என்பதால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த 8,000 செவிலியர்கள் தகுதிகள் இருந்தும் நிரந்தரம் செய்யப்படாதது ஏன்? எனக் கேள்வியை எழுப்பியது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் செவிலியர்களின் பிரதிநிதித்துவத்தை ஆராயவேண்டிய பொறுப்புடைய குழுவானது அதை செய்யாமல் மூன்று இயக்குனர்களை கொண்டு ஆராய்ந்து செவிலியர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு என கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், செவிலியர்கள் தரப்பு வழக்கறிஞர் சமர்பித்த ஆவணங்களில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான பணியை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அரசு தரப்பில் செவிலியர்களின் விண்ணப்பங்களின் அசல் நகல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடியை வரும் ஆகஸ்ட் 23ம் தேதி காணொலி காட்சி மூலம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details