தமிழ்நாடு

tamil nadu

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 10:44 PM IST

K.Annamalai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் K.அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஷ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக வரும் சனிக்கிழமை (டிசம்பர் 2) நேரில் ஆஜராகும்படி, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர்கள் C.V.ஷியாம் சுந்தர், V.வணங்காமுடி, R.பரமசிவம், சஞ்சய் ராமசாமி ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கை இன்று (நவ.30) விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அண்ணாமலை மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, பியூஷ் மனுஷ்-க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: சென்னையில் கனமழை காரணமாக இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு..!

ABOUT THE AUTHOR

...view details