தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவர்களுக்கு மெட்ராஸ் ஐ பரிசோதனை முகாம் தொடங்கி வைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 10:30 PM IST

Madras Eye checkup for School students: 12 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மெட்ராஸ் ஐ கண் பரிசோதனை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

மா சுப்பிரமணியன்
மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னை செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளியில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக மெட்ராஸ் ஐ கண் பரிசோதனை தொடர் முகாமினை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "எழும்பூர் கண் மருத்துவமனைக்குச் சென்று, மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஒவ்வொரு பருவ மழைக்கு முன்பாகவே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு என்றாலும், அதனுடைய பாதிப்புகள் வராமல் தடுப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவத் துறை எடுத்து வருகிறது. அந்த வகையில், இன்று (செப்.16) சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் என அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 12 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:அம்மா உணவக சாப்பாட்டில் கிடந்த அரணை: அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்!

இந்த முகாமை பள்ளிகளில் செயல்படும் RBSK பிரிவும், எழும்பூர் கண் மண்டல ஆராய்ச்சி மையமும் ஒருங்கிணைந்து நடத்துகிறது. மேலும், இந்த மெட்ராஸ் ஐ பரிசோதனை முகாம் இன்று (செப் 16) முதல் வருகிற 25ஆம் தேதி வரை என 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

கண் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆரோக்கியமான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். குஜராத், கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இந்த கண் நோய் கூடுதலாக தென்படுகிறது என்றாலும், அச்சம் கொள்ளத் தேவையில்லை.

மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:”மக்களுடன் ஸ்டாலின்” - நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details