தமிழ்நாடு

tamil nadu

முதுகலை மருத்துவப் படிப்பில் 128 காலி இடங்கள்.. சிறப்பு கலந்தாய்வு நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 5:55 PM IST

Ma Subramanian: முதுகலை மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள 128 இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:2023-2024ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ (எம்டி, எம்எஸ், டிப்ளமோ, டிஎன்பி,எம்டி) பட்டப்படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் நிர்வாக இடங்கள் ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் ஜூலை 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலை 27ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

எம்டி, எம்எஸ், டிப்ளமோ அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஓதுக்கீட்டிற்கு 8 ஆயிரத்து 376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 7 ஆயிரத்து 526 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் எம்டி, எம்எஸ், டிப்ளமோ அரசு
மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஓதுக்கீட்டில் சேர 3 ஆயிரத்து 688 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3 ஆயிரத்து 36 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மேலும், எம்டிஎஸ் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிற்கு 779 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 661 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும், எம்டிஎஸ் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்காக 446 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

DNB படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 676 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 499 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ (MD/MS/DIPLOMA, DNB & MDS) பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 4 சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வின் முடிவில், தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டிய 69 இடங்கள் காலியாக இருந்தது.

இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு எழுதிய கடிதத்தில், “தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான காலியிடங்களை நிரப்ப கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டி எழுதிய கடிதத்திற்கு சாதகமாக பதிலளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான இந்த கூடுதல் சுற்று கலந்தாய்வின் விளைவாக, மாநிலத்தில் காலியாக உள்ள விலைமதிப்பற்ற எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். இதே அடிப்படையில், தமிழ்நாடு மாநிலத்தில் முதுகலை மருத்துவம், டிஎன்பி மற்றும் எம்டிஎஸ் இடங்களுக்கான சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்டோபர் 25ஆம் தேதி நிறைவடைந்தது.

4 சுற்று கலந்தாய்வின் முடிவில் 69 எம்டி, எம்எஸ் இடங்கள், 11 டிஎன்பி இடங்கள் மற்றும் 48 எம்டிஎஸ் இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் உதவியாக இருக்கும். எனவே, கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும். முதுகலை சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்குமாறு இந்திய தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) (டிஎம்/எம்சிஹெச்) படிப்புகளைப் பொறுத்தவரை, நாடு முழுவதிலும் தமிழ்நாட்டில் தான் அதிகபட்ச உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளது என்பதையும், இந்த இடங்களில் மாநில ஒதுக்கீட்டில் 50 சதவீதம் தமிழக அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கியுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஒதுக்கீட்டின் மூலமாக உயர் சிறப்பு மருத்துவ சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கப் பெறுகிறது. அதே நடைமுறையைப் பின்பற்றி, அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீதம் உயர் சிறப்பு மருத்துவ இடங்களை ஓதுக்கீடு செய்ய இந்த வருடமும் அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதுகலை பட்டப்படிப்பு விவகாரத்திலும் மாணவர் சமுதாயத்திற்கும், மாநில சுகாதார அமைப்புக்கும் பெரும் பயனளிக்கும், ஆக்கப்பூர்வமான பதிலை விரைந்து பெறுவோம் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்ற EGF சிஇஓ அனுராக் சக்சேனா!

ABOUT THE AUTHOR

...view details