தமிழ்நாடு

tamil nadu

பெருங்களத்தூரில் பூட்டிய வீட்டில் திருட்டு - சோசியல் மீடியா பிரபலம் கைது!

By

Published : Mar 22, 2023, 5:21 PM IST

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் சோசியல் மீடியா இன்புஃளுயன்சரான அனீஷ் குமாரி என்ற பெண்மணியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை
சென்னை

நகை, பணம் திருடிய சோசியல் மீடியா பிரபலம்

சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்த சபாபதி (37) - மாலதி (31) தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சபாபதி காலையில் வேலைக்குச் சென்றுள்ளார் - அவரது மனைவி மாலதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலையில் மாலதி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போனது தெரியவந்தது. பூட்டியிருந்த வீட்டில் பூட்டை உடைக்காமல் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு மாலதி அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் சபாபதி புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் மாலதி வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அப்போது ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் அணிந்த இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மாலதி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.

அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரிக்கலாம் என்று பார்த்தபோது, வாகனத்தின் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததால் இந்தப் பெண்மணி நகையைத் திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். பின்னர் மூன்று நாட்களாக தொடர்ந்து சுமார் 47 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் சோசியல் மீடியா இன்புஃளுயன்சரான அனீஷ் குமாரி (33) என்ற பெண்மணி நகை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், போலீசார் பெண் காவலர்களுடன் அனீஷ் குமாரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, தான் திருடவில்லை என்றும், ரீல்ஸ் செய்து மாதம் 15 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதித்து வருவதாகவும், தனக்கு திருட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் போலீசார் சிசிடிவி காட்சிகளை காண்பித்ததும், திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அனீஷ் குமாரியை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரை பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், ரீல்ஸ் மூலமாக கிடைக்கும் வருமானம் தனக்கு போதுமானதாக இல்லை என்பதால் திருடியதாகவும், திருடிய பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி ஆன்லைனில் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details