தமிழ்நாடு

tamil nadu

வேட்பு மனுவில் தவறான தகவல் அளித்த விவகாரம்: முன்னாள் அமைச்சர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

By

Published : Jul 12, 2021, 1:39 PM IST

வேட்பு மனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம், கே.சி.வீரமணி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் வீரமணி
வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் வீரமணி

சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணி அதிமுக சார்பில் போட்டியிட்டு ஆயிரத்து 91 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், வேட்புமனுவிலும், பிரமாணப் பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி.வீரமணிக்கு எதிராக குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ராமமூர்த்தி என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை.12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தனது வேட்பு மனுவில் தவறான பான் நம்பரை குறிப்பிட்டிருந்தார்.

அவரது சொத்து விவரங்கள் வருமான வரி கணக்குடன் ஒத்துப்போகவில்லை. தவறாக தகவல் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், "இது சம்மந்தமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, மனுதாரரின் புகார் மனு முடித்து வைக்கப்பட்டது. மேலும், 1966ஆம் ஆண்டுக்கு முன், வேட்பு மனுவில் தவறான தகவல்கள் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையமே புகார் அளித்து வந்தது. ஆனால், சம்மந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக யார் வேண்டுமானாலும் குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது" எனத் தெரிவித்தார்.

நீதிபதிகள் உத்தரவு

இதையடுத்து, இந்த மனு மீது இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: குவாரிகள் விதிமீறல்: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details