தமிழ்நாடு

tamil nadu

தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் பாஜக; ஜே.என்.யூ தமிழ் மாணவர்கள் சங்கம் கண்டனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 6:54 PM IST

Jawaharlal Nehru University: அரசியல்வாதி, பத்திரிகையாளர் எனில் ரெய்டு விடுவது, மாணவர்கள் எனில் அவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது எனத் தொடர்ந்து வன்முறையில் பாஜக அரசு இயங்கி வருகிறது என்று ஜே.என்.யூ தமிழ் மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Jawaharlal Nehru University
Jawaharlal Nehru University

சென்னை:டெல்லிஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவரான நாசர் முகமது மொஹிதீன் தன் மேற்பார்வையாளரான ஷைலஜா சிங் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து ஜே.என்.யூ. பல்கலைக்கழகம் இது குறித்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது, இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் தீர விசாரித்த பின், ஷைலஜா சிங்கை மாற்ற வாய்ப்பில்லை என்றும், நாசருக்கு வேறு மேற்பார்வையாளர் வழங்க முடியாது என்றும் அக்குழு தெரிவித்துள்ளது. மேலும், மாணவர் நாசரின் கடிதத்தில், அவர் பட்டப்படிப்பைத் தொடர வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதை அடுத்து, ஆராய்ச்சி படிப்பைத் தொடர முடியாத நிலையில், நாசருக்கு சேர வேண்டிய சம்பளம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு பல்வேறு தரப்புகளின் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த நிலையில், இன்று (அக்.11) ஜே.என்.யூ தமிழ் மாணவர் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜே.என்.யூ. தமிழ் மாணவர் சங்கம் கண்டனம்: இதுகுறித்து ஜே.என்.யூ. தமிழ் மாணவர் சங்கம் தெரிவித்ததாவது, “ஜே.என்.பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் ஆய்வு மாணவர் நாசர் முகமது முகைதீன் கடந்த பிப்ரவரி மாதம் டெப்லாஸ்-இல் நடத்தப்பட்ட வன்முறையில் ஏ.பி.வி.பி. கள்வர்களால் தாக்கப்பட்டார்.

பெரியார், மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் உடைக்கப்பட்டு மாணவர் சங்க அலுவலகம் அவர்களால் தாக்கப்பட்டது. இதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்தன. மேலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் வந்து கண்டனம் தெரிவித்து, பின் துணைவேந்தரையும் சந்தித்துப் புகாரளித்து விட்டுச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, நாசர் தொடர்ந்து முற்போக்கு மாணவ அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தநிலையில், அவரின் ஆய்வு நெறியாளர் பேராசிரியர் ஷைலஜா சிங் என்பவர் நாசருக்குத் தன்னால் ஆய்வு வழிகாட்டியாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நிறுவன ரீதியான பல துன்புறுத்தல்கள் நாசர் மீது நிகழ்த்தப்பட்டன.

வேறொரு பேராசிரியரை ஆய்வு நெறியாளராக நியமிக்காமல் அவரது துறை அவரைப் பல மாதங்களாக அலைக்கழித்து வந்தது. இந்நிலையில் மாணவர் நாசர் படிப்பைத்தொடர முடியாது என்று கடிதம் வழங்கியுள்ளனர். இதைத் தமிழ் மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இது நாசர் எனும் ஒருவருக்கானதன்று. பாஜகவை கேள்வி கேட்கும் அனைவருக்கும் ஏற்படும், ஏற்பட இருக்கும் நிலையே. அரசியல்வாதி, பத்திரிகையாளர் எனில் ரெய்டு விடுவது, மாணவர்கள் எனில் அவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது எனத் தொடர்ந்து வன்முறையில் பாஜக அரசு இயங்கி வருகிறது.

கடந்த மாதம் நண்பர் ஃபரூக் ஆலமுக்கு நடந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். இது நாசருக்கானதல்ல; முற்போக்குச் சிந்தனைகொண்ட ஒவ்வொரு மாணவர்களுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை. ஜே.என்.யூ. என்னும் சுதந்திர சிந்தனையின் மீது நிகழ்த்தப்படும் மற்றுமொரு தாக்குதல்'' என்று தமிழ் மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அமைச்சர்களிடம் கேள்வி கேட்டால் சபாநாயகர் பதில் கூறுவதா? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details