தமிழ்நாடு

tamil nadu

“சிறிய கிராமங்களை மேம்படுத்தினால் இந்தியா தானாக மேம்படும்” - எம்பி ஜெயந்த் சின்ஹா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 7:19 AM IST

Jayant Sinha: சிறிய கிராமங்களை மேம்படுத்தினால் இந்தியா தானாக மேம்படும் என நிலைத்தன்மைக்கான பள்ளியின் தொடக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

நிலைத்தன்மைக்கான பள்ளியின் தொடக்க விழா
ஜெயந்த் சின்ஹா

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் “நிலைத்தன்மைக்கான பள்ளியின் தொடக்க விழா” நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான ஜெயந்த் சின்ஹா பேசியதாவது, “இன்று உலகம் தீயில் எரிவது போல மிகவும் சூடாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் அதிக அளவு வெப்பத்தை நாம் அனுபவித்துள்ளோம்.

மேலும், கனடாவில் ஏற்பட்ட தீயில் இருந்து, சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வரை அனைத்து இயற்கை விபத்துகளுக்கு திடீர் காலநிலை மாற்றம்தான் காரணம். தற்போது நாம் எதிர்பார்க்காத வகையில் காலநிலை மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றம், முக்கிய வளங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் விதமாக மனித நடவடிக்கைகள் இருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இந்த உலகம் அனுபவித்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இனி வரும் பொறியாளர்கள், மற்றவற்களைப் போல் செயல்படாமல் இந்த பூமியை எப்படி காப்பாற்றுவது என சிந்திக்க வேண்டும். இது போன்ற மாற்றங்களை நம்மால் கணிக்க முடியாத நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் எப்படி தடுப்பு முறைகளை உருவாக்க முடியும்? கடந்த 220 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.2-இல் இருந்து 1.3 டிகிரி செல்சியஸாக மாறி உள்ளது.

இந்நிலையில், பிற நாடுகளில் இருக்கும் தொழில்நுட்பங்களால் இந்தியாவில் இருக்கும் சிறிய கிராமங்களுக்கு பயன் அளிக்காது. சிறிய கிராமங்களை மேம்படுத்தினால் இந்தியா தானாக மேம்படும். மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கானத் தீர்வை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான தீர்வை நீங்கள் கண்டுபிடித்து விட்டால், கண்டிப்பாக அரசாங்கம் அதற்கான நிதியுதவி வழங்கும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதாவது, “ஐ.நா சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (1 முதல் 17 வரை) அடைவது உலகம் முழுமைக்குமான கூட்டுப் பொறுப்பாகும். இப்பள்ளியின் மூலம் நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தீர்வுகள் குறித்து கலந்து ஆலோசிக்க, விவாதிக்க, மேம்படுத்த, தீர்வுகளை உருவாக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினரைக் கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம். நிலைத்தன்மை தொடர்பான மனிதத்திறன் மேம்பாட்டைக் கட்டமைப்பது இப்பள்ளியின் முதன்மை நோக்கமாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:கர்நாடக எல்லையில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! 13 பேர் பலி! உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்?

ABOUT THE AUTHOR

...view details