தமிழ்நாடு

tamil nadu

‘ஓபிஎஸ் கட்சியிலேயே இல்லை, அவர் எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்’ - ஜெயக்குமார்

By

Published : Oct 13, 2022, 5:35 PM IST

சபாநாயகர் சட்டசபையில் அதிமுக உறுப்பினர்களுடன் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு இடம் கொடுக்க கூடாது எனவும் சபாநாயகர் விதிப்படி நடக்க வேண்டும் எனவும் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

சென்னை: காமராஜர் சாலையில் உள்ள உயர் கல்வி மன்றம் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 17ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தீய சக்தி என்ற கருணாநிதி குடும்பத்திலிருந்து தமிழகம் விடுபட வேண்டும், என்ற வகையில் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்று, 51 ஆம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி 9 மணி அளவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்த உள்ளார் என்று கூறினார்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக கொடிக்கம்பங்களுக்கு வர்ணம் அடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், உயர் கல்வி வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த முடியாத நிலையை இந்த விடியா அரசு பூட்டு போட்டு ஏற்படுத்தி உள்ளது. அதிமுக சார்பில் நாங்கள் அதை பராமரித்துக்கொள்கிறோம் என்று அனுமதி கேட்டும் அனுமதி அளிக்கவில்லை.

வரும் 17ஆம் தேதி அதிமுக சார்பில் ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்கப்பட வேண்டும், அனுமதி அளிக்க வேண்டும் அதை சரி பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை பொறியாளரை சந்திப்பதற்காக வந்தேன், என்னாலே அவரை சந்திப்பதற்கு முடியவில்லை அப்படி இருக்கும்பொழுது பொதுமக்கள் எப்படி அவர்களை சந்திக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர் 12 மணிக்கு பொறியாளர் சந்திக்க நேரம் ஒதுக்கிவிட்டு தற்போது வரையிலும் அவர் வரவில்லை என்று குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில் பாஜக தான் எதிர்க்கட்சியாக உள்ளது என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார். அண்ணாமலை ஆயிரம் சொல்லட்டும் அவருடைய கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படி சொல்கிறார்.

எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த தான் பார்ப்பார்கள் அதை தப்பு சொல்ல முடியாது. வெறும் மூன்று சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை இழந்ததாகவும், இந்த விடியா திமுக அரசு அன் பாப்புலர் ஆகிவிட்டதாகவும் விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக சொல்கிறார்கள், ஆனால் அது முடியவில்லை. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக தான், சென்னை மேயர் 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறுவதாக விமர்சனம் செய்தார். தகுந்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இறுதி நேரத்தில் அவசர கதியில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக்காலத்தில் சென்னைக்கு பெரும் ஆபத்து வரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் ஓபிஎஸ் தரப்புக்கு இடம் ஒதுக்கும் விவகாரத்தில் சபாநாயகர் சட்ட விதிப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயக்குமார் ஓபிஎஸ் இடம் கட்சியும் இல்லை அவர் கட்சியிலும் இல்லை. ஓபிஎஸ் எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்? வேறு எங்காவது இடம் ஒதுக்கட்டும் என்று கூறினார்.

திமுகவை வீழ்த்துவதற்காக கூட டிடிவி தினகரனை அதிமுகவில் இணைத்துக்கொள்ள முடியாது என்று பேசிய அவர் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்றும் இணைவதற்கு அவசியமே இல்லை, நாங்கள் இணையும் அளவுக்கு டிடிவி, சசிகலா பெரிய சக்தி இல்லை டிடிவி தினகரன் வேண்டுமென்றால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் அதிமுக மற்றும் தமிழக மக்களால் புறக்கணிப்பட்ட சக்தி தான் சசிகலா, டிடிவி தினகரன். அவர்களுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறிய அவர் சட்டசபையில் அதிமுக உறுப்பினர்களுடன் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏகளுக்கு இடம் கொடுக்க கூடாது, சபாநாயகர் விதிப்படி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:முதலமைச்சரை தூங்க விடுங்கள் - திமுக அமைச்சர்களுக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details