தமிழ்நாடு

tamil nadu

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் - பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு

By

Published : Oct 18, 2021, 4:29 PM IST

Updated : Oct 18, 2021, 4:45 PM IST

2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள், தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆகியவற்றை பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

1
1

சென்னை:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2016 , 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் , "2016 , 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்ட காலம், தற்காலிகப் பணிநீக்கக் காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், கலந்தாய்வின் போது அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்றும், போராட்டக் காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவையும் சரி செய்யப்படும்" என்றும் ஸ்டாலின் உறுதியளித்தார்.

ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும்

இது தொடர்பாக இன்று(அக்.18) தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 2016 , 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், சில அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி , வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

1

அந்த வேலை நிறுத்தப் போராட்ட காலங்களுக்கு 'பணிபுரியவில்லை என்றால் ஊதியமில்லை' என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும், குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட்டன.

2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் (10.2.2016 முதல் 19.2.2016 வரை) , 22.8.2017 ( ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ), 07.9.2017 முதல் 15.9.2017 வரை மற்றும் 22.1.2019 முதல் 30.1.2019 வரை பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன.

2

இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக் காலமும், பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன .

வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தும் போது , வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட பணியாளர் தகவலின்றி பணிக்கு வராமல் இருந்துள்ளார் என்பதையும், வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், அவர் உடனடியாக பணிக்கு திரும்பி உள்ளார் என்பதையும் சம்பந்தப்பட்ட விடுப்பு முறைப்படுத்தும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்" என அதில் கூறிப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அதிமுகவின் எழுச்சியைப் பொய் வழக்குகளால் முடக்க திமுக முயற்சி'

Last Updated : Oct 18, 2021, 4:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details