தமிழ்நாடு

tamil nadu

வருவாய் பற்றாக்குறை குறைந்தது குறித்து அரசு ஊழியருடன் அமைச்சர் பிடிஆர் விவாதிக்கத் தயாரா?

By

Published : Mar 28, 2023, 8:25 PM IST

தமிழ்நாடு அரசின் வருவாய்ப் பற்றாக்குறை எவ்வாறு 3000 ஆயிரம் கோடியாக குறைந்தது எப்படி என்பதை மனிதவள மேலாண்மை மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு கேள்வி எழுப்பினார்.

Etv Bharat
Etv Bharat

வருவாய் பற்றாக்குறை 3000 ஆயிரம் கோடியாக குறைந்தது எப்படி என்பதை அமைச்சர் பிடிஆர் அறிவிக்க தயாரா? - அன்பரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எழிலகத்தில் ஆவின் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை, தென் சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் அன்பரசு, "அரசுத் துறைகளின் 64க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆட்சியாளர்களிடம் உரிமை மீட்பிற்கான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்த நிலையில் இந்த அரசு 3 பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. முதல் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிட்டார். 3வது பட்ஜெட்டில் ஒட்டுமாெத்த அரசு ஊழியர்களும் அத்தக் கூலிகளாக மாறக்கூடிய நடைமுறையை நேற்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திராவிட மாடல் ஆட்சி என்றால், நிரந்த அரசு ஊழியருக்கு வாய்ப்பில்லை என சொல்லிவிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கையை அளித்து வருகிறார். மறுபுறம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துரோகத்தை இழைத்து வருகிறார். நம்பிக்கைக்கு ஆதரவாகவும், துரோகத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்களின் மானியக் கோரிக்கை வரும்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடுவது என முடிவு செய்துள்ளோம். எனவே, தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம்.

3ஆவது பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெளிவாகக் கூறி விட்டார். கடந்த கால ஆட்சியில் வாங்கிய கடன் 62 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. 3ஆவது பட்ஜெட்டில் பற்றாக்குறை 62ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது எனக் கூறியுள்ளார். பற்றாக்குறையை குறைப்பதற்கான வரி வருவாய் எங்கிருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியே பரவாயில்லை. நாங்கள் இழந்ததை மீட்பதற்கு போராடிக் கொண்டு இருக்கும்போது, இருப்பதை பறிப்பதாக திராவிட மாடல் ஆட்சி மாறிக்கொண்டு இருக்கிறது.

70 ஆயிரம் கோடியை பறித்து, எங்கள் வயிற்றில் அடித்து, 62 ஆயிரம் கோடி பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடியாக குறைப்போம் எனக் கூறியுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறோம் எனவும், திராவிட மாடல் அத்தக்கூலிகளாக மாற்ற வேண்டும் என துணிச்சலாக சட்டப்பேரவையில் முதலமைச்சரை பக்கத்தில் வைத்துக்கொண்டு கூறுகிறார். அரசு ஊழியர்கள் 5 ஆயிரம், 10 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு சிரமப்படும் நிலையில் அவுட்சோர்சிங்கில் போட வேண்டும் என துணிச்சலுடன் கூறுகிறார்.

அரசுப் பணியாளர்களின் துறையின் பெயரை ஐடி செக்டார் போல் இந்தத்துறையை மாற்றப்போகிறேன் என சொல்லி, மனிதவள மேம்பாட்டுத்துறை என மாற்றம் செய்துள்ளளார். கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ளது போல் மனிதவள மேம்பாட்டுத்துறை என மாற்றி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசுப் பணியார்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என பேசும் துணிவு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது யாருக்கும் வராது. எனவே, சட்டப்பேரவை முடிவதற்கு முன்னர் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து அறிவிக்காவிட்டால் கோட்டை முற்றுகைப் போராட்டம் வரும் 19ஆம் தேதி நடத்தப்படும்.

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை நடத்துவதில் கால தாமதம் செய்தோம். ஆனால், நேற்று சட்டப்பேரவையில் அறிவித்ததைப் பார்க்கும்போது அரசு ஊழியர்களை அத்தக்கூலியாக மாற்றும் நிலைமை வரும் என்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சியில் கூடி அடுத்த கட்டப் போராட்டத்தை அறிவிக்க உள்ளோம். எங்களின் கோரிக்கைகளை மீட்டெடுக்க தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் தயங்க மாட்டோம்" என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: Cognizant Technology கட்டுமானத்திற்கு ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற விவகாரம்; அதிமுக அமைச்சர் லஞ்சம் பெற்றாரா?

ABOUT THE AUTHOR

...view details