தமிழ்நாடு

tamil nadu

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை!

By

Published : Apr 5, 2021, 4:19 PM IST

மீண்டும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த, தேர்வு காலங்களில் கரோனா பரவல் எப்படி இருக்கும் என்பது குறித்து சுகாதாரத்துறையிடம் பள்ளிக்கல்வித்துறை அறிக்கை கேட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக 2020-21 கல்வியாண்டில் பெரும் பாலான நாள்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர், ஜன.,19ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடத்த அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

மாநிலம் முழுவதும் இந்த தேர்வினை 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மீண்டும் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மாணவர்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து தேர்வு நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.5) நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்வு மையங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன என்பது குறித்து முழுமையாக ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு பேரவைத் தேர்தல் முடிந்த பின் ஒருவாரம் கழித்து மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், தேர்வு நடைபெற இருக்கும் காலகட்டத்தில் கரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா?

ABOUT THE AUTHOR

...view details