தமிழ்நாடு

tamil nadu

Iridium Scam: ரூ.2.50 லட்சம் கோடியாம்...! - நிஜ ’சதுரங்க வேட்டை’ சம்பவம்; ஒருவர் கைது

By

Published : Nov 27, 2021, 11:44 AM IST

Updated : Nov 27, 2021, 12:01 PM IST

வெளிநாட்டு நிறுவனத்திற்கு இரிடியத்தை 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுத்தருவதாக தாறுமாறாக வாக்குறுதியை அள்ளிவிட்டு அதிமுக பிரமுகரும், தொழிலதிபருமான நெடுமாறன் என்பவரை ஏமாற்றியதாக நடிகர் அம்ரீஷ் கைதுசெய்யப்பட்டு வெளியே வந்த நிலையில், இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் தற்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Iridium Scam
Iridium Scam

சென்னை:நடிகை ஜெயசித்ராவின் மகன் நடிகர் அம்ரீஷ் ஆசைவார்த்தை காட்டி தன்னிடம் பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக தொழிலதிபர் நெடுமாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

படப்பிடிப்புத்தளம், பங்களா ஆகியவை கட்டி நெடுமாறன் வாடகைக்கு விட்டுவருகிறார். இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு திரைப்படம் எடுப்பதற்காக பங்களாவை வாடகை விட்டதன் மூலம் தனக்கு அம்ரீஷ் அறிமுகமானதாக நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

’சதுரங்க வேட்டை’ பாணியில் மோசடி!

தன்னிடம் அரியவகை இரிடியம் இருப்பதாகவும், அதை மலேசியாவில் உள்ள நிறுவனம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கத் தயாராக உள்ளதாகவும் அம்ரீஷ், ஆசைவார்த்தைகள் காட்டியதாக நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் நெடுமாறன் குறிப்பிடும் அம்ரீஷின் ஆசைவார்த்தைகள்:

  • குறிப்பாக, பெரம்பலூரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கலசத்திலிருந்து ஐ.ஆர். 77 ரக இரிடியம் எடுக்கப்பட்டது.
  • 150 தலைக்கட்டுகளுக்குச் சொந்தமான அந்த அம்மன் கோயிலில் உள்ள விலைமதிக்க முடியாத இரிடியத்தை எடுத்து மலேசியாவில் உள்ள நிறுவனத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.
  • அக்கோயில் தலைக்கட்டுகளில் முக்கிய நபர்களுக்கும், மலேசியா கொண்டுசெல்வதற்கும் 100 கோடி ரூபாய் அளவில் செலவு செய்தால், இரிடியத்தை விற்பனை செய்துவிடலாம் என்பன உள்ளிட்டு வாக்குறுதிகள் அள்ளிவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் நெடுமாறன்.

மேலும் வெளிநாட்டினர் மூலமாகவும், பல்வேறு மோசடிகளை செய்து உண்மையாகவே இரிடியம் இருப்பதாக தன்னை நம்பவைத்த கதையும் கூறி நெடுமாறன் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

26.20 கோடி ரூபாய் மோசடி

பின் தன் கையிலிருந்த 26.20 கோடி ரூபாயை அம்ரீஷிடம் தந்துள்ளார் நெடுமாறன். அதன்பின், நெடுமாறன் தன் கையில் கிடைத்த இரிடியத்தை பார்சலில் மலேசியாவிற்கு அனுப்பிய பிறகு நீண்ட நாள் ஆகியும் மலேசிய நிறுவனத்திடமிருந்து பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர் அம்ரீஷிடம் கேட்டுள்ளார்.

கரோனா காலத்திற்கு முன்பாக திடீரென தன் வீட்டிற்கு வந்த அம்ரீஷ், தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்து பணத்தை ஓராண்டு ஆகியும் திருப்பித் தராததால் அம்ரீஷ் கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி அம்ரீஷை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஒருவர் கைது

இதனையடுத்து, அம்ரீஷ் உயர் நீதிமன்றத்தை நாடி, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என மனு தாக்கல்செய்தார். மேலும் நெடுமாறன் புகாரைத் திரும்பப் பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு ரத்துசெய்யப்பட்டது.

கபாலி பாபு

இருப்பினும் இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற நபர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். அந்த அடிப்படையில் தரகராகச் செயல்பட்ட சாலிகிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற கபாலி பாபுவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த இரிடியம் மோசடிக்குப் பின்னால் இருக்கும் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:Maanaadu: லிட்டில் சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

Last Updated : Nov 27, 2021, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details