தமிழ்நாடு

tamil nadu

போலி ஆவணங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.20 கோடி இழப்பீட்டுத்தொகை திரும்ப வசூல்

By

Published : Dec 2, 2022, 9:33 PM IST

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

d
d

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில், கடந்த முறை அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா, வட்டாட்சியர் மீனா ஆகியோர் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு ஆஜராகினர். அப்போது நீதிபதி, போலி ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெறாவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தவறாக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையான ரூ.20 கோடியே 52 லட்சம் முழுவதும் வசூலிக்கப்பட்டுவிட்டதாகவும், நீதிமன்ற வழக்கு கணக்கில் விரைவில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அப்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், இந்த திட்டத்திற்காக 190 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளநிலையில், 20 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிப்பதாகவும், மீதமுள்ள தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, அரசிடம் செலுத்தபட்ட இழப்பீடு எவ்வாறு வழங்கப்பட்டது என இவ்வளவு காலம் கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றம் தீவிரம் காட்டியபிறகுதான் நெடுஞ்சாலை ஆணையம் கவனத்தில் கொள்ளுமா என கேள்வி எழுப்பினர்.

அதன் பின்னர் 190 கோடி ரூபாய் இழப்பீடு எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்களை தற்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதேசமயம் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:முதல்வரின் முகவரித்துறைப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details