தமிழ்நாடு

tamil nadu

விளையாட்டு மைதானங்களில் மது விலக்கு வைக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் ஆணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 10:59 PM IST

Madras High Court: விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறுவது விலக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டு அரங்குகளில் மதுவிலக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றம் விளக்கம்
விளையாட்டு அரங்குகளில் மதுவிலக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றம் விளக்கம்

சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வசதியாகத் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தலைமையிலான அமர்வில் இன்று (அக்.30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சர்வதேச கருத்தரங்கு நடைபெறும் இடங்கள் பொது இடங்கள் என்றும், பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் வைத்திருக்க அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் எப்படிச் சமாளிக்கப்படும், ஒரு விளையாட்டு மைதானத்தில் 75 ஆயிரம் பேர் திரளக்கூடும். அவர்கள் மதுபானங்கள் வைத்திருக்க அனுமதித்தால் நிலைமை என்னவாகும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் கல்வி நிறுவன கருத்தரங்குகளில் மதுபானங்கள் பரிமாறக் கூடாது என அறிவிக்கப்பட்டதைப் போல, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய விளையாட்டு மைதானங்களும் விலக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: பேரணிக்கு அனுமதிக்கு வழங்காததால் காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் அவமதிப்பு வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details