தமிழ்நாடு

tamil nadu

PG Engineering Counselling: எம்.இ., எம்.டெக் கலந்தாய்வில் 18% ஜிஎஸ்டி கட்டாயம்

By

Published : Dec 31, 2021, 5:18 PM IST

முதுகலைப் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் கலந்தாய்வுக் கட்டணத்துடன் 18 விழுக்காடு ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முதுகலை பொறியியல் கலந்தாய்வு
முதுகலை பொறியியல் கலந்தாய்வு

சென்னை: முதுகலைப் பொறியியல் படிப்பு எம்.இ., எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜனவரி 3ஆம் தேதிமுதல் பிப்ரவரி 1ஆம் தேதிவரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2021-22ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான தேர்வு நடத்தப்பட்டது.

மேலும் கேட் நுழைவுத்தேர்வு எழுதி தகுதிபெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றது. வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சிக்கல் காரணமாக நடப்பாண்டில் முதுகலைப் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை காலதாமதமாகத் தொடங்கவுள்ளது.

அறிவிப்பு

7,525 காலி இடங்கள்

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகளில் கேட் தேர்வின் மூலம் 732 இடங்களும், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வின் மூலம் ஆயிரத்து 453 மாணவர்கள் என இரண்டாயிரத்து 185 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

அதேபோல் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கேட் தேர்வின் மூலம் 624 இடங்களும், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வின் மூலம் 824 மாணவர்கள் என ஆயிரத்து 448 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் ஆறாயிரத்து 977 இடங்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 610 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக மூன்றாயிரத்து 85 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

18% ஜிஎஸ்டி விதிப்பு

இவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்கள் வைப்புத்தொகையாக ரூ.5000, எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. மாணவர்கள் வைப்புத்தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

மேலும் பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு கட்டணமாக ரூ.300-உடன் ஜிஎஸ்டி கட்டணம் 18 விழுக்காடு அதாவது 54 ரூபாயும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. மாணவர்கள் கலந்தாய்வு கட்டணம் ரூ.150-உடன் ஜிஎஸ்டி கட்டணமாக 27 ரூபாய் செலுத்த வேண்டும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலைப் பொறியியல் படிப்பில் 10 ஆயிரத்து 610 இடங்கள் உள்ள நிலையில் மூன்றாயிரத்து 85 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். கரோனா தொற்றின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக முதுகலைப் படிப்பில் சேர்வதற்கான விருப்பம் குறைந்துள்ளது.

மேலும் முதுகலைப் படிப்பிற்கான வேலைவாய்ப்பும் குறைந்துள்ளதால், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே ஏழாயிரத்து 525 இடங்கள் காலியாக உள்ளன.

இதையும் படிங்க: 15 நாள்கள் விடுமுறை: குஷியில் மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details