தமிழ்நாடு

tamil nadu

40 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்!

By

Published : Apr 22, 2023, 9:22 AM IST

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 40 ஆயிரம் பேருக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது எனவும், இவர்களுக்கு தினமும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக பயிற்சி அளித்து வருகின்றனர் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் 40 ஆயிரம் பேருக்கு நேரடி நீட் பயிற்சி - அன்பில் மகேஷ்

சென்னை: இந்திய தொழில்நுப்ட கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற தமிழ்நாடு முழுவதும் உள்ள 274 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விழா சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் நடைபெற்றது.

மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி, "பள்ளிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு கல்வி முழுமையாக கிடைப்பதற்கு இலவச பேருந்து பயணத்தை இலவச பாட புத்தகம் சீருடை போன்றவற்றையும் வழங்கினார். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் டைட்டில் பார்க், ஸ்ரீபெரும்புதூரில் கார் உற்பத்தி ஆலை போன்றவற்றை கொண்டு வந்தவர்.

அவரின் வழியில் நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து மாணவர்களின் மீது அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 19,000 கோடியும், பள்ளிக் கல்வித் துறைக்கு 39 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான் செல்லும் நிகழ்ச்சிகளில் மாணவர்களுடன் உரையாடி அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் உங்களுக்கு தேவையானதை செய்து தர தாயாகவும் தந்தையாகவும் முதலமைச்சர் இருக்கிறார்.

முதலமைச்சர் கூறுவது போல் கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத செல்வம். தற்போது வந்துள்ள மாணவர்கள் சிறப்பாக படித்து, வரும் கல்வி ஆண்டில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அரசு பள்ளி மாணவர்கள் 274 பேருக்கு ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் நிறுவனங்களில் சேர்வதற்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதுகுறித்து விழிப்புணர்வு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணம்.

அரசு பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் ஏதாவது ஒரு கலை அறிவியல் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ படிப்பில் சேர்ந்து விடக்கூடாது. அவர்களும் முதன்மையான கல்லூரியில் சேர வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் ஆசையாக உள்ளது. இங்கு வந்துள்ள மாணவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.

அவர்களுக்கு சிறந்த வல்லுனர்களை கொண்டு 45 நாட்கள் இங்கேயும் உண்டு உறைவிடத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு மருத்துவமும், கல்வியும் இரு கண்கள் போன்றது. மாணவர்கள் வாழ்வில் வளர்ச்சி பெற வேண்டும் என பல திட்டங்களை வகுத்து கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் படித்த 40 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மதியம் வரையில் பயிற்சி அளித்து வருகின்றனர் ஆனாலும் நீட் தேர்விற்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும். மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உஷா மாதிரி பள்ளிகள் சங்கத்தின் உறுப்பினர் செயலாளர் சுதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக நிராகரிப்பா? - எஸ்பி வேலுமணி ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details