தமிழ்நாடு

tamil nadu

"ஆளுநர் உரையன்று நடந்ததை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை" - முதலமைச்சர்!

By

Published : Jan 13, 2023, 3:35 PM IST

Updated : Jan 13, 2023, 3:50 PM IST

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையன்று நடந்த நிகழ்வுகள் குறித்து மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Governor
Governor

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட சொற்றொடர்களை தவிர்த்திருந்தார். அவர் உரை முடிந்த பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னதாகவே பேரவையில் இருந்து கிளம்பினார். இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று(ஜன.13) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, "சமுக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே உணர்ந்துவிட்டது. மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது, அதுவே மக்கள் மனதை வென்றது. காலம் குறைவு. ஆனால், ஆற்றியுள்ள பணிகள் அதிகம்.

கடந்த 9ஆம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றினார். அன்று நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டு கடந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை காக்கவும் நான் எனது சக்தியை மீறி செயல்படுவேன் என்று இந்த மாமன்றமும், என்னை தேர்வு செய்து அனுப்பிய மக்களும் நன்கு அறிவார்கள்.

ஆயிரம் கைகள் மறைந்தாலும் ஆதவன் மறைவது இல்லை. தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க என்றும் உழைப்பவன் கருணாநிதியின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மெய்பித்து காட்டும் நாளாக அன்றைய தினம் அமைந்து இருந்தது தவிர, வேறு அல்ல. பேரவைக்கு வந்து உரையாற்றி ஆளுநருக்கு அரசின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஓசூரில் டிரேட் சென்டர்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Last Updated : Jan 13, 2023, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details