தமிழ்நாடு

tamil nadu

அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி உயர்வு... அரசாணை வெளியீடு

By

Published : Aug 18, 2022, 10:59 PM IST

அரசு ஊழியர்களுக்கு 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக அகவிலைப்படி உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 34% ஆக அகவிலைப் படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு 34% ஆக அகவிலைப் படி உயர்வு

சென்னை:இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'முதலமைச்சர் 75ஆவது சுதந்திர தின உரையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 01ஆம் தேதி முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி தலைமைச்செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி ஜூலை 01ஆம் தேதி முதலே உயர்த்தி வழங்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட கூடுதல் அகவிலைப்படி ஜூலை 01ஆம் தேதி முதல் ரொக்கமாக வழங்கப்படும். ஜன.01 முதல் ஜூலை 30ஆம் தேதி வரை அகவிலைப்படியானது தொடர்ந்து 31 விழுக்காடாகவே இருக்கும்.

ஜூலை 2022ஆம் மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவைத்தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்பட வேண்டும்.
அதுவே, 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும்.

மேலே அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேரப்பணியாளர்களுக்கும், சில்லறை நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, பகுதி நேர பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு மனு

ABOUT THE AUTHOR

...view details